நல்லூர் உற்சவ நாளை விடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை!

சிங்கள மக்கள் தமது பெரகராவை தேசிய நாளாகப் போற்றுகின்றார்களோ அதேபோலத்தான் தமிழ் மக்களும் நல்லூர் கந்தசுவாமிகோவிலின் உற்சவ நாளை தேசிய நாளாகப் போற்றுகின்றனர்.

இந்தப் புனித நாளில் ஏனைய மக்கள் அணிதிரள்வதோடு, யாழ்ப்பாண மக்களும் முழுமையாக அணிதிரண்டு முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்நாளில் அரச மற்றும அரச சார்பற்ற நிறுவனங்களை மூடி விடுமுறை நாளாக பிரகடனப்படுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர், ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் ஆகியோருக்கு யாழ்ப்பாண மாவட்ட இந்து சமயப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்துசமயப் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் இரதோற்சவம் எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்தத் தினத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் மத வேறுபாடு இன்றி முருகப் பெருமானை வழிபட்டு வருவது வரலாற்றுக் காலம் தொட்டு நீடித்து வரும் மரபு.

அந்நியர் ஆட்சிக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் இந்த ஆலயத்தில் தங்கி வழிபடுவதாக அப்போதைய அரசாங்க அதிபர் அறிக்கை வெளியிட்டமையை இந்நேரத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts