நல்லூர் உற்சவம்: 300 கடைகள் அமைக்க அனுமதி

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழாவின் போது ஆலயச் சூழலைச் சுற்றிலும் சுமார் 300 கடைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கவுள்ளதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 25 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. மஹோற்சவ காலத்தில் ஆலய வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கான இடங்கள் வாடகைக்கு கொடுக்கப்படும்.

இடத்தின் பிரபல்யம், அளவு, வியாபாரத்தின் வகை ஆகியவற்றை கருத்திற்கொண்டு கடைகள் அமைக்கும் இடத்துக்கான குத்தகைக் கட்டணம் அறவிடப்படும். ஆகக்குறைந்ததாக கச்சான் கடை அமைப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் அறவிடப்படுகின்றது.

அதிகூடிய தொகையானது கடையின் இடத்தை ஏலத்துக்கு விடுவதன் மூலம் தீர்மானிக்கப்படும். தற்போது ஆலய சூழலில் 100 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமான திருவிழாக்கள் நெருங்கும் வேளையில் அதிகளவான கடைகள் அமைக்கப்படும். அந்தவகையில் 300 கடைகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் தற்போது மணல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மணலை வீண் விரயம் செய்வதைத் தடுக்கும் நோக்குடனும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைச் சுற்றி அதிகளவான மணல் இம்முறை கொட்டப்படவில்லை. பிரதட்டை அடிப்பவர்களுக்கு தேவையான வகையில் 50 கியூப் மணல் கொட்டப்பட்டுள்ளது என யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா தற்போது நடைபெற்று வருகையில் ஆலயத்தைச் சுற்றி வழமையாக போடப்படும் மணலின் அளவைவிட குறைவான அளவில் மணல் கொட்டப்பட்டிருந்தது. பிரதட்டை அடிப்பவர்களும் ஒரு பகுதியில் நேராக பிரதட்டை அடிக்கும் வகையில் மணல் கொட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஆணையாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது,

“கடந்த வருடம் 250 கியூப் மணல் கொட்டப்பட்டது. ஆனால் இம்முறை 50 கியூப் மணலே கொட்டப்பட்டது. தேவைக்கதிகமாக மணல் கொட்டப்படுதல் மணலை விரயமாக்கும். மணல் அள்ளும் நாகர் கோவில் பகுதியானது உவர் நிலமாக மாற்றமடைந்து அங்கு மக்கள் வசிக்க முடியாத சூழல் உருவாகும். நாங்கள் சௌகரியத்துக்காக அதிகளவு மணலை எடுத்து, இன்னொரு மக்களை அவதிக்குள்ளாக்க முடியாது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தற்போது கொட்டப்பட்டுள்ள மணல் பிரதட்டை அடிப்பவர்களுக்கு போதுமானதாகவுள்ளது.

நாகர் கோவிலில் மணல் அள்ளுவதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் மாதாந்தம் 200 கியூப் மணல் அகழ்வதற்கு மட்டும் தற்போது அனுமதி வழங்கியுள்ளார். யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனுடன் கலந்துரையாடியே இந்த 50 கியூப் மணலையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம்” என அவர் மேலும் கூறினார்.

Related Posts