நல்லூர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடியவர்கள் கைது

நல்லூர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் இரு இளைஞர்களைக் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்துத் தெரியவருவதாவது,

நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழா, கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அதனையொட்டி ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்துக்கு வருகை தருவோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை (22) மாலை நேரத் திருவிழா முடிவடைந்த பின்னர் இரவு 08 மணியளவில் இரு இளைஞர்கள் ஆலய சூழலில் காலணிகளுடன் நடந்து சென்றுள்ளனர்.

அதனையடுத்து அங்கு சிவில் உடையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களையும் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை, யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த 16ஆம் திகதி நல்லூருக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆலய நடைமுறையை மீறி ஆலய சூழலுக்கு தனது வாகனத்தில் சென்று வழிப்பாட்டை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts