நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் போது வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி விட்டு செல்லுமாறு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வூட்லர் தெரிவித்துள்ளார்.
தற்போது நல்லூர் திருவிழாக் காலம் ஆரம்பித்து உள்ளமையால் இந்துக்கள் அனைவரும் கோயில்களுக்கு சென்று வருவது வழமை.
இரவு,பகல் மற்றும் அதிகாலை என பல நேரங்களில் கோவில் களுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் போது வீட்டில் யாருமற்ற நிலையிலேயே அனை வரும் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதனால் இவை தொடர்பில் அவதானித்து விட்டு அந்த வீடுகளுக்கு திருடர்கள் திருடுவதற்கு செல்கின்றனர்.
எனவேதான் வீடுகளின் பாது காப்பினை உறுதிப்படுத்தி செல்லு மாறு நாம் கேட்டுக் கொள்கின் றோம். ஆலயத்திற்கு அல்லது வெளியில் செல்லும் போது வீட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை அவதானித்து விட்டு செல்லல் வேண்டும்.
திருடர்கள் ஆலயத்திலும் வெளி இடங்களிலும் தமது கைவரிசையினை காட்டி வருகின்றனர். இது தொடர்பில் பொலிஸாராகிய நாம் நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றோம். இந்த விடயத்தில் தனியே பொலிஸார் நடவடிக்கை மட்டும் எடுத்தால் கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
மாறாக ஏனோ தானோ என்று இருந்து விட்டால் நஷ்டம் தவறு விட்டவர்களுக்கு தான். உங்கள் வீடுகளிற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக யாரும் நடமாடினால் அவர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும். இதே போன்று சன நெரிசலில் ஆலய வழிபாட்டில் ஈடுபடும் போது உங்களுடைய உடைமைகளில் எப்போதும் ஒரு கவனத்தை வைத்திருங்கள்.
இவ்வாறான ஆலய திருவிழாக்களில் திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர்.
அதிலும் அவர்கள் வெளி மாவட்ட பெண்களாகவே உள்ளனர். சாதாரண பெண்கள் போன்று உடையணிந்து வரும் இவர்கள் அதிகரித்த சனநெரிசலை பயன்படுத்தி தமது திருட்டினை மேற்கொள்கின்றனர். இவர்களை இலகுவில் அடையாளம் காணவும் முடியாது.
இரவு நேரங்களில் ஆலயத்திற்கு வருபவர்கள் தம்முடைய வீடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் வயோதிபர்களை தனியாக விட்டு செல்வதனையும் தவிர்க்க வேண்டும்.
திருட அல்லது கொள்ளையடிக்க வருபவர்கள் வயோதிபர்களை தாக்கவும் கூடும். இதனால் எதிர்பாராத சம்பவங்களும் இடம் பெறலாம்.
ஆகவே பொலிஸாரின் அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்யாமல் அறிவுறுத்தல்களை பின்பற்றி பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதே வேளை நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றத்தின் போது பெறுமதி மிக்க தங்க சங்கிலிகள் திருட்டு போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.