நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா : வீதி தடை பற்றிய அறிவித்தல்!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(28) முற்பகல்- 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 07 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்குச் சூர்யோற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்குகார்த்திகை உற்சவமும் நடைபெறவுள்ளது.
மேலும்,16 ஆம் திகதி புதன்கிழமை காலை- 07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை 05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 17 ஆம் திகதி வியாழக்கிழமை காலை07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும்
நடைபெறவுள்ளது.

அத்துடன் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 07 மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 23 ஆம் திருவிழாவான 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 21 ஆம் திகதி காலை 07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் ஆலயத்திற்குச் சென்று வழிபடும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி இன்று வியாழக்கிழமை முதல் நல்லூர் ஆலயத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளையும் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துச் சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும் வாகனங்கள் ஆனைப்பந்திச் சந்தி, நாவலர் வீதி, நல்லூர் குறுக்கு வீதி, பருத்தித்துறை வீதியூடாகப் பயணிக்குமாறும்,

பருத்தித் துறை வீதியூடாக யாழ். நகர் நோக்கி வரும் வாகனங்கள் முத்திரைச் சந்தி, செம்மணி வீதி, கச்சேரி – நல்லூர் வீதி, கண்டி வீதி சென்றடைந்து அங்கிருந்து யாழ். பேருந்து நிலையத்தைச் சென்றடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வீதி மாற்று நடைமுறை இன்று வியாழக்கிழமை(27) நண்பகல்- 12 மணி முதல் அடுத்த மாதம்- 23ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுமெனவும், எனவே, வாகனச் சாரதிகள் இந்த மாற்று வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் வாகனச் சாரதிகளிடம் கேட்டுள்ளார்.

Related Posts