நல்லூரில் பதற்றம்!! – போலி இலக்கத்தகடுளை பொருத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் கைது!!

போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும் தலைக்கவசத்துக்கு சலோ ரேப் ஒட்டி மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நல்லூர் ஆலய பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நண்பரை ஏற்றுவதற்கு வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 2) பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் ஆலய பின் வீதியில் துர்க்கா மணிமண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

வீதியால் பயணித்த ஐஸ்கிறீம் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தொலைபேசியில் வேறு ஒருவரைத் தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அத்துடன், சம்பவ இடத்துக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸாரும் வந்துள்ளனர். அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த போது அங்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்திறங்கினர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் முன் பக்க இலக்கத் தகடு WP என மேல் மாகாண பதிவு இலக்கமாகவும் பின்பக்க இலக்கத் தகடு CP மத்திய மாகாண பதிவு இலக்கமாகவும் காணப்பட்டது. அதனை ஆராய்ந்த போது, இலக்கத் தகடுகளை மோசடியாக மாற்றம் செய்தமை கண்டறியப்பட்டது.

அத்துடன், இளைஞர்கள் இருவரில் ஒருவரின் தலைக்கவசத்தின் முகப்புக் கண்ணாடி கறுப்பு சலோ ரேப்பால் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது. அதனால் இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related Posts