கடந்த ஆண்டிலும் பார்க்க இந்த ஆண்டு நல்லூர் உற்சவ காலத்தில் யாழ். மாநகர சபைக்கு 20 லட்சம் ரூபா மேலதிக வருமானம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா. நல்லூர் உற்சவகால செயற்பாடுகள் இம்முறை முன்னைய காலங்களைவிட சீராகவும் சிறப்பாகவும் இடம்பெற்றி ருந்ததாகவும் அவர் கூறினார். வெளிநாடுகளில் இருந்துகூட தமிழ் மக்கள் நல்லூர் திருவிழாவுக்கு வருகை தந்தமை மகிழ்ச்சியைத் தந்ததாகவும் தெரிவித்தார்.
நல்லூர் உற்சவம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்த ஆண்டு நல்லூர் உற்சவ காலத்தில் ஒரு கோடியே 9 லட்சத்து 76 ஆயிரத்து 763 ரூபா யாழ். மாநகர சபைக்கு வருமானமாகக் கிடைத்தது.
உற்சவம் குறித்த பத்திரிகைச் செய்திகள் உடனுக்குடன் கவனத்தில் எடுக்கப்பட்டு அவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடைகள் டென்டர்கள் மூலமே விநியோகிக்கப்பட்டன. சில கடைகள் தொடர்பில் உத்தியோகத்தர்கள் நடந்து கொண்ட விதங்கள் குறித்து முறைப்பாடு கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எதிர்காலத்தில் ஒவ்வொரு பகுதிகளாகக் கடைகளைப் பிரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 460 கடைகளை வழங்குவதற்கு வசதிகள் இருந்தபோதும் 205 கடைகளையே வழங்க முடிந்தது என்றார்.