நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகை வந்த பக்தர்கள் தவறவிட்ட பெருமளவான பொருட்கள், யாழ்.மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை உரியவர்கள் தகுந்த ஆதாரங்கள் காட்டிப் பெற்றுக்கொள்ளுமாறும் யாழ்.மாநகர சபை சுகாதார வைத்தியதிகாரி வியாழக்கிழமை (28) தெரிவித்தார்.
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரையிலும் இடம்பெற்றது. இதன்போது, ஆலயத்திற்கு பல பிரதேசங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகை தந்தனர்.
இவ்வாறு வருகை தந்த பக்தர்கள், சன நெருக்கடிகளால் தாங்கள் கொண்டு வந்த பொருட்களைத் தவறவிட்டிருந்தனர். இவ்வாறு தவறவிடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு, மாநகர சபை சுகாதாரப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவை திருவிழா இடம்பெற்ற காலங்களில் உரியவர்களிடம் சுகாதாரப் பிரிவு வழங்கி வந்தது.
இருந்தும், தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரங்கள், மணிக்கூடு, கைப்பைகள், வங்கி அட்டைகள் மற்றும் இதர பொருட்கள் என ஏராளமான பொருட்கள் உரிமை கோரப்படாத நிலையில் சுகாதார பகுதியில் இருக்கின்றன.
இவற்றின் உரிமையாளர்கள், மாநகர சுகாதாரப் பிரிவுடன் தொடர்புகொண்டு உரிய ஆதாரங்களைக் காட்டி பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார வைத்தியதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.