நல்லாட்சி அரசாங்கத்தின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முடிந்தால் தாய்ப்பாலுக்கும் அபராதம் அல்லது வரி விதிப்பார் என கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெ லிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்ட நிதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தற்போதைய அரசாங்கம் வரிச்சுமைய மக்கள் மீது சுமத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
“இன்று எங்கு பார்த்ததாலும் வரி வரி வரி, பேருந்து நிலையத்தின் ஒரு ஓரத்தில் தனது ஒரு மாத குழந்தைக்கு பாலூட்டும் சந்தர்ப்பத்தில் தனது குழந்தையை பாரத்து கூறுகின்றார். பிள்ளையே பாலினை மறைவாகவே பருகு, ரவி கருணாநாயக்க கண்டால் தண்டப்பணம் விதிப்பார். ஆகவே மறைவாக பருகு என தனது குழந்தைக்கு கூறுகின்றார்.
இதுவே வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான தற்போதைய நிலவரம். நிச்சயமாக ரவி இதனை கவனித்தால் தங்களது நிதி பற்றாக்குறையை போக்க இந்த வேலையை செய்வார். தண்டப்பணம் அல்லது வரி அறவீடு செய்வார்.“
கடந்த 2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் பேருவளையில் நடைபெற்ற அசம்பாவிதங்களுக்கு தற்போதைய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவே மூல காரணமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றம்சாட்டினார்.
“முஸ்லிம்களுக்கு என்ன நடந்துள்ளது? தெவட்டகஹ பள்ளிக்கு அருகில் பதாதை ஒன்றை ஏந்திக்கொண்டு இருக்கும் ஒருவர் இனவாத முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென கூறுகின்றார். பேருவளை சம்பவத்தை முழுமையாக திட்டமிட்டது ராஜித சேனாரத்ன என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.
மாட்டுத் தலைகள் இரண்டை வெட்டிவந்து பௌத்த விகாரைக்கு முன்னால் வைத்துவிட்டு ஏதாவது செய்யுமாறு பொது பல சேனாவை துண்டிவிட்டது அவரே. இறுதியில் கோட்டாபய மற்றும் மஹிந்த மீது பழியை போட்டதோடு முஸ்லிம்கள் மத்தியில் வைராக்கியத்தை ஏற்படுத்தியது ராஜிதவே.“ – என்றார்.