நல்லாட்சி எனப்படும் அரசாங்கத்துக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. அவற்றைக் காட்டி அந்த அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. இதனை உலகுக்கு காட்டவே எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளதாக யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் அருட்திரு மங்களராஜா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, கலைத்தூது மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துக்கூறும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
நல்லாட்சி அரசாங்கம், காணிகள் விடுவிக்கப்படும், மீள்குடியேற்றம் நடைபெறும், கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், தீர்வு எட்டப்படும் என வடபகுதிக்கு ஒரு முகத்தையும், தமிழர்களுக்கு தீர்வை கொடுக்கமாட்டோம், இராணுவத்தினரை குற்றவாளிகளாக நிறுத்தமாட்டோம் என தென்னிலங்கை இனவாதிகளுக்கு ஒரு முகத்தையும், வாக்குறுதிகளை அள்ளி வீசிச் செயலில் காட்டாமல் ஜெனீவாவுக்கு ஒரு முகத்தையும் காட்டுகின்றது.
இந்த வருடத்துக்குள் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இதனால் இந்தப் பேரணி நடத்தப்படுகின்றது என்றார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துக்கூறுகையில்,
இந்தப் பேரணி ,சுமார் 40 அமைப்புக்களுடன் கலந்துரையாடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரணி நடைபெறாவிட்டால், நல்லாட்சி அரசாங்கத்தின் கபட நாடகம் வெளியில் வராமல் போய்விடும். இந்தப் பேரணி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல தரப்பினரும் கேள்வி எழுப்புகின்ற அளவுக்கு பேரணி முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு பேரணியும், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஒரு பேரணியும் ஆரம்பித்து, இரண்டும் இலுப்பையடிச் சந்தியில் சந்தித்து, தொடர்ந்து திறந்தவெளி அரங்கைச் சென்றடையவுள்ளது.