வடக்கில் நலிவடைந்த நிலையில் உள்ள ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அவற்றை மேம்படுத்தவென தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் 2.5 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா முத்தையா மண்டபத்தில் வவுனியா மாவட்டக் கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் கூட்டுறவுதின விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (04.10.2015) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின்போதே, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த வடக்கின் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கூட்டுறவுச் சங்கங்களின் மேம்பாட்டுக்கான இந்நன்கொடை நிதியை வழங்கி வைத்துள்ளார்.
வடமாகாண கூட்டுறவு அமைச்சால் கூட்டுறவுத்துறையின் அபிவிருத்தி கருதி 100 நாள் வேலைத் திட்டமொன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் நலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களை அடையாளம்கண்டு அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே, ஐந்து மாவட்டங்களில் இருந்தும் முதற்கட்டமாக ஒவ்வொரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் தெரிவு செய்யப்பட்டு, தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவென கூட்டுறவுத் திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் இருந்து இந்நிதி வழங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
யாழ். மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு ப.நோ.கூட்டுறவுச் சங்கமும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி ப.நோ.கூட்டுறவுச் சங்கமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ப.நோ.கூட்டுறவுச் சங்கமும், வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் ப.நோ.கூட்டுறவுச் சங்கமும், மன்னார் மாவட்டத்தில் மாந்தை வடக்கு ப.நோ.கூட்டுறவுச் சங்கமுமே இந்நிதியைப் பெற்றுக்கொண்டுள்ள ப.நோ.கூட்டுறவுச் சங்கங்கள் ஆகும். இச்சங்கங்களின் தலைவர்களும் பொதுமுகாமையாளரும் இதற்கான காசோலையை அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்கள். காசோலை கையளிப்பில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.ரவீந்திரநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.