நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் அன்னதானம் வழங்குதல், சப்பற உற்சவங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்று (புதன்கிழமை) யாழில் நடைபெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், “நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து 18 நாட்கள் இடம்பெறவுள்ளது.
அதன்போது நயினாதீவு பகுதியிலுள்ள 30 அடியவர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கியுள்ளோம். அதேவேளை, மகோற்சவ காலத்தில் அன்னதானம் வழங்குவதற்கும் சுகாதாரப் பிரிவினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களில் இருந்து எவரும் ஆலய உற்சவத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்தோடு, யாழ். மாவட்டத்தில் இருப்பவர்களும் கலந்துகொள்ள முடியாது.
எனவே, இதனைக் கருத்திற்கொண்டு இம்முறை நயினாதீவு ஆலய உற்சவத்திற்கு வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அதேவேளை தேர், சப்பற உற்சவங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது. ஆலய உற்சவங்கள் அனைத்தும் உள்வீதி உடனேயே நிறைவுபெறவுள்ளது” என மேலும் தெரிவித்தார்.