நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
குறித்த, பிரேரணைக்கு எதிராக 145 வாக்குகளும், ஆதரவாக 51 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்தப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்தது.எனினும், பாராளுமன்றத்தின் ஒலி வாங்கிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சபை நடவடிக்கைகள் நேற்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கமைய நேற்று குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும், மங்கள சமரவீர, டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன, சந்திரசிறி கஜதீர, ஆறுமுகன் தொண்டமான், அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, டக்ளஸ் தேவானந்தா, ஜாதிக ஹெல உறுமய ஆகியன குறித்த பிரேரணைக்கு எதிராகவும், மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாகவும் வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.