நமது தனித்துவமும் தன்மானமும் பாதுகாக்கப்பட வேண்டும் – ஈ.சரவணபவன்

saravanabavan_CIஅரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று கொல்லும் என்பர். அது இன்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தெய்வம் இன்று எமது பக்கம் நிற்கிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் தவற விட்டுவிடக்கூடாது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

நேற்று முன்தினம் மாலை வழக்கம்பரையில் நடைபெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரமாண்டமான பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறிய தாவது:

கடந்த மாநகரசபைத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 18 ஆக இருந்தது. தொடர்ந்து நடை பெற்ற பிரதேச சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பு வீதம் 48 ஆக அதிகரித்தது. இம் முறை நடைபெறவுள்ள மாகாண சபைக்கான தேர்தலில் நாம் 90 வீத மானவர்களாவது கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்.

தன் மானமுள்ள தமிழர்கள் என்று நிரூபிக்க நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக வாக்களித்தால் மாகாண சபைத் தேர்தலில் அனைத்து ஆசனங்ளையும் கைப்பற்ற முடியும்.

அரசும் ஈ.பி.டி.பியும் இணைந்து தேர்தலைக் குழப்பவும் கலவரங்களைத் தூண்டிவிடவும் முயற்சிக்கின்றன. இது விடயத் தில் நாம் மிகவும் அவதான மாக இருக்க வேண்டும்.

அரச கூட்டணிக்குள் இன்று குத்து வெட்டுகளும், குழி பறிப்புகளும் தலை தூக்கிவிட்டன. கடந்த ஞாயிற்றுகிழமை மக்களிடம் வாக்கு கேட்டுச் சென்ற அரசதரப்பு வேட்பாளர் ஒருவர் மக்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

உம்முடைய சட்டத்தரணி தொழிலை நீதிமன்றத்தில் போய் செய்யும். இங்கு வந்து தரகர் வேலை செய்ய வேண்டாம் என்று கூறிய மக்கள் அவரைப் பேசக்கூட விடாமல் திருப்பி அனுப்பிவிட்டனராம்.

இது மட்டுமல்ல வட மாகாணத்தில் இடம்பெறும் காணி அபகரிப்புகள், சிங்களக் குடியேற்றம், முஸ்லீம் பள்ளி வாசல்கள் உடைப்பு, இராணு வத்தினரின் அடாவடித்தனங்கள் தொடர்பாக எமது தலைவர் நாடாளுமன்றத்தில் ஒத்திதுள்ளார். அரசின் குற்றேவல்காரனான, சிங்களவர்களினதும் அரசினதும் பாதுகாவலனாக இந்த அமைச்சர் அங்கு பதில் அளித்தார். யாழ். மண்ணில் எந்தவிதமான குறையும் இல்லை. இராணுவத்தால் எதுவித பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்புப் பணியுடன் அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்று வக்காலத்து வாங்கிப் பேசியதுடன் காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம் தொடர்பாக வாயைக் கூடத் திறக்கவில்லை.

இப்படியான இனத்துரோகிகள் இன்று வந்து உங்களிடம் வாக்குக் கேட்கின்றனர். உண்மையான தமிழன் ஒருவன்கூட இவர்களுக்கு வாக்களிக்கமாட்டான். தமிழ் மக்கள்மீது சர்வாதிகாரம் புரியும் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் வடமாகாண சபையின் ஆளுநராக மீண்டும் வந்துவிடலாம் என்ற மிதப்பில் செயல்படுகின்றார். இவர் தனது கட்டுப்பாட்டில் தலையாட்டிப் பொம்மைகளாக செயற்படக்கூடிய நான்கு கைக்கூலிகளை மாகாண சபைத் தேர்தலில் களமிறக்கியுள்ளார்.

இவர்களை இனங்கண்டு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். ஜனாதிபதி தம்மை மாகாண சபையின் முதலமைச்சராக அறிவிக்கவில்லையே என்ற ஆதங்கத்தினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மெளனம் சாதிக்கின்றார். அதுமட்டுமல்லாது தமது கட்சி வேட்பாளர்களுக்காக பரப்புரைச் செய்வதிலும் இவர் அக்கறை கொள்ளவில்லை. யாழ். மாவட்டத்தில் இருபத்து ஐயாயிரம் வாக்குகளைப் பெற்றுவிட்டு தமிழ் மக்கள் மத்தியில் ஆகக் கூடுதலான செல்வாக்குடையவர் தான் மட்டுமே என பொது மேடைகளிலும் நாடாளு மன்றத்திலும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.

25 ஆயிரம் வாக்குகளும் தீவுப் பகுதிகளில் வாழும் மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அடாவடித் தனத்தால் பறித்தெடுக்கப்பட்ட வாக்குகள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

இந்த நிலையில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தனது கட்சிக்காரர்கள் தன்னை விடக் கூடுதலான வாக்குகளைப் பெற்று விட்டால் தனது வெத்து வேட்டுகள் அம்பலமாகிவிடுமே என அஞ்சுகின்றார் இந்த அமைச்சர்.

இன்று யாழ் மண்ணில் ஆளுநராக இருக்கும் முன்னாள் இராணுவ கட்டளைத் தளபதி ஒருவரின் மறு அவதாரமாக செயல்படுகின்றார் இராணுவத்திற்கு பொறுப்பான மற்றுமொரு உயர அதிகாரி. இவர் தான் வடமாகாண சபையின் அடுத்த ஆளுநராக வந்துவிடலாம் எனவும் நம்புகின்றார்.

இராணுவத்தால் களமிறக்கப்பட்டுள்ள நால்வரில் ஒருவர் றெமிடியஸ். இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நகரசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்து கொண்டே கட்சிக்கு எதிராக செயற்பட்டு பச்சைத் துரோகம் செய்தவர். இவர் இன்று இராணுவத்துடனேயே காணப்படுகின்றார்.

இராணுவத்தினர் இவருக்கு ஆதரவாகப் போஸ்டர் ஒட்டுகின்றனர். மக்களை அச்சுறுத்தி வாக்குக் கேட்கின்றனர். எதிரானவர்களை வாக்களிக்க கூடாது என அச்சுறுத்துகின்றனர். இது அப்பட்டமான தேர்தல் அத்து மீறலாகும்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. றெமீடியஸின் இராணுவ உறவுகளை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியும் தேர்தல் ஆணையாளர் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத முது கெலும்பு இல்லாதவராகவே இருக்கின்றார்.

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்களின் தாயக உணர்வை நாடி பிடித்துப் பார்க்கும் ஒரு கருத்துக் கணிப்பாகவே அமையப் போகின்றது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

மாநகர சபைத் தேர்தலின் போது மக்கள் கணிசமான அளவில் வாக்களிப்பில் கலந்து கொள்ளாததினால்தான் மாநகர அதிகாரத்தை இழக்க நேரிட்டது. இந்த நிலை இம்முறை நடை பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிலும் ஏற்படக்கூடாது.

இந்தத் தேர்தலை இந்தியாவும் சர்வதேச நாடுகளும் மிகவும் அவதானமாக உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. எனவே எந்தவிதமான அச்சமும் இன்றி நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். முதலில் நமது தமிழ்த் தாயகத்தின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

நமது தமிழ் மண்ணில் இருந்து சிங்களக் கட்சியின் வெற்றிலை சின்னத்திற்கு ஒரு வாக்கு கூடக் கிடைக்கக் கூடாது. நமது தனிகத்துவமும் தன்மானமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இணக்க அரசியல், நல்லிணக்கம் என்றெல்லாம் வாய் கிழியக் கத்துகின்றனர். ஆனால் இவை குறித்து எந்த வொரு சந்தர்ப்பத்திலாவது சமிக்ஞையை காட்டியுள்ளார்களா?

நமது வேட்பாளர்கள் சுதந்திரமாக பிரசாரம் செய்ய முடியவில்லை. இங்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்திற்கான விளம்பரப்பதாதைகள் கூட பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

அதேவேளை ஆளும் கட்சியின் போஸ்டர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இராணுவம் பாதுகாப்பு வழங்குகின்றது. இவ்வாறான அடக்கு முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Related Posts