கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் நேற்று 25-12-2016 நத்தார் தினத்தில் முதியவர்களுக்கு பொதிகள் வழங்ப்படுவதாக அறிவித்து அந்த கிராமத்தில் வாழ்கின்ற 136 முதியவர்களை அங்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனர்.
காலை பத்து மணிக்கு குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இயலாத நிலையிலும் பொது நோக்கு மண்டபத்தில் ஒன்று கூடியுள்ளனர்.
கிராமத்தின் முதியோர் சங்கமும், வெளியில் இருந்து சமூகமளித்திருந்த ஒரு அமைப்பும் சேர்ந்து பொலீத்தீன் பைகளில் முதியவர்களுக்கு பொதிகளை வழங்கியுள்ளனர். பலர் இந்த நிகழ்வை பாராட்டி உரை நிகழ்த்திய பின்னர் புகைப்படமும் எடுக்கப்பட்டு பொதிகள் வழங்கப்பட்டன. பொதிகளை பெற்றுக்கொண்ட முதியர்களில் சிலர் அதனை அங்கு வைத்தே பிரித்து பார்க்க முற்பட்ட போது ஏற்பாட்டாளர்கள் தடுத்துள்ளதோடு வீடுகளுக்குச் சென்று பாா்க்குமாறும் முதியவர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதனால், தங்கள் வீடுகளுக்குச் சென்ற முதியவர்கள் ஆவலுடன் பொதிகளை பிாித்து பார்த்த போது அதனுள் பாவித்து கழித்துவிடப்பட்ட கிழிந்த பழைய ஆடைகள் குறிப்பாக எமது மக்கள் பயன்படுத்தாத உள்ளாடைகள் அதிலும் பெண்களுக்கான உள்ளாடைகள் அதிகம்.
இதனை அவதானித்த முதியவர்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ள நிலையில் தகவலை ஏனையவர்களிடம் கூறி கவலை தெரிவித்துள்ளனர். ஒரு ஆண் முதியவருக்கு வழங்கப்பட்ட பொதியில் மூன்று பெண்களுக்குரிய மேல் உள்ளாடையும், ஆறு கீழ் உள்ளாடையும், ஒரு கிழிந்த ஆண்களுக்குரிய கீழ் உள்ளாடையும், ஒரு பழைய சாறியும் காணப்பட்டுள்ளன. இவ்வாறே ஏனையவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொதிகளில் காணப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான ஆடைகள் மேலைத்தேய நாடுகளில் பயன்படுத்தும் ஆடைகளாகவே காணப்படுகின்றன.
தாங்கள் ஏழை கிராமத்து முதியவர்கள் எனும் காரணத்தினால் இவ்வாறு இவர்கள் நடந்துகொண்டது தங்களை அவமானப்படுத்திய செயல் எனவும், இதே பொதியை இவர்கள் நகரத்தை அண்டிய கிராமங்களில் உள்ள முதியவர்களுக்கு கொடுப்பார்களா? எனக் கேள்வி எழுப்பிய முதியவர்கள் அறிவொளி எனும் அமைப்பே தங்களுக்கு இதனை வழங்கியது என்றும் தெரிவித்துள்ளனர்.
படங்கள் நன்றி குளோபல்தமிழ்