நண்பனின் துரோகத்தினால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துள்ளது!

யாழ்ப்பாணத்தில் நேற்றய தினம் கடன் தொல்லையால் ஒரு குடும்பமே மொத்தமாக தற்கொலை செய்துள்ளது. யாழ்ப்பாணத்தை உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தின் பின்னால் மிகப்பெரிய துரோகத்தனம் உள்ளதாக அவர்களது குடும்ப உறவினர்கள் சொல்லியுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கணவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்து நேற்றய தினம் மனைவி தனது மூன்று மகள்களுடன் நஞ்சினை அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

மேற்படி பரிதாபகரமான தற்கொலைகள் நிகழ்வதற்கு கடன் கொடுத்து ஏமாற்றிய சம்பவம்தான் பிரதான பின்புலமாக உள்ளதாக பிள்ளைகளுடன் தற்கொலை செய்த பெண்ணின் சித்தி மற்றும் தாயார் ஆகியோர் கூறுகின்றனர்.

அவர்கள் குறிப்பிட்ட விடயங்களினை இங்கே தருகின்றோம்,

”அவர் (ஏற்கனவே தற்கொலை செய்தவர்) தனது குடும்ப சினேகிதனுக்கு ஒரு கோடியே பதினேழு லட்சம் ரூபா நம்பிக்கை அடிப்படையில் கடனாகக் கொடுத்தார்.

அந்த நம்பிக்கைக்கு காரணம், அவர்கள் இருவரதும் அப்பாமார் சினேகிதர்கள், அதே போலதான் இவர்களும் சினேகிதர்கள். அந்த வகையில் தான் நம்பிக்கை அடிப்படையில் இவ்வளவு பெரிய கடன் கொடுத்தது. ஆறு மாதத்தில் திருப்பித் தருவேன் என்றுதான் கடன் வாங்கினார். ஆனால் கொடுக்கவில்லை. கேட்கப்போனால் ஏமாற்றுக் கதைகள் கதைத்து கடைசிவரை காசு கொடுக்கவில்லை.

காசு கடனாகக் கொடுக்கும்போது சினேகிதனின் மனைவி, தமையன் மற்றும் தமையனின் மனைவி ஆகிய மூன்று பேரும் நின்றுதான் வாங்கினார்கள். இதன்படி சினேகிதனின் தமையனின் பெயெருக்கு பத்து லட்சம் காசும் தம்பியாரின் பெயெருக்கு மிச்சத் தொகையும் கொடுத்தது.

ஆறு மாதத்துக்குப் பிறகு காசு குறித்துக் கேட்டபோது காசோலையிலிருந்து காசு திரும்பிவிட்டது. அவர் காசு போடவில்லை. இது குறித்து விசாரித்தபோது காசு வாங்கியவரை களவாக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பிவிட்டார்கள்.

பத்து லட்சம் வாங்கிய தமையனிடம் கேட்டபோது என்னிடம் பத்து லட்சம் தானே நீ தந்தது, நீ செய்யிறத செய்துபார் என்று சொன்னார்.

காசு வாங்கியவரின் மனைவியிடம் சென்று, நீதானே பொறுப்பு நின்றாய் என்று கேட்டபோது, நான் நின்றதற்கு என்ன ஆதாரம் இருக்கு? நீ வாங்குறமாரி வாங்கிப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

இதன்பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு பத்து லட்சம் வாங்கிய தமையன் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து முடித்துவிட்டார். மிச்சம் கொடுக்கவில்லை. போன ஓகஸ்ட் முப்பதாம் திகதி வழக்குக்கு போய் வந்து முப்பத்தோராம் திகதி அவர் தற்கொலை செய்தவர்.

அப்போதே குடும்பத்தோடு சாகுற எண்டுதான் திட்டம்போட்டு, அதன்படி அவர் முதல் மருந்து குடித்துவிட்டார். அவர் முதல் குடிச்சதால் அவரின் பரிதாபத்தைக் கண்டு மனைவி அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தான் குடிக்கவில்லை. ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

பிள்ளைகளையும் தாயையும் மிகவும் கவனமாகப் பார்க்குமாறு வைத்தியசாலையில் எங்களிடம் மிகவும் வற்புறுத்திக் கூறி அனுப்பினார்கள். அப்படித்தான் இவ்வளவு நாளும் இவர்களைக் கவனமாகப் பார்த்துப் பார்த்துவந்து இன்றைக்கு நான் வேலைக்கு போன பிறகு இது நடந்திருக்கிறது.அவா தனது அம்மாவைப் படுக்குமாறு கூறிவிட்டே இந்த விபரீதம் முடிவினை எடுத்துள்ளா. இது அவர்களின் வீடுதான், நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம்” என்று கண்ணீரோடு கூறினார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts