நட்புக்கு அடையாளம் கபாலி!

தாணு சொல்லும் ரஜினி சீக்ரெட்

‘‘ரஜினி சார் படம் பண்ணணும்ங்கிற பல வருஷ விரதத்துக்குப் பரிசுதான் ‘கபாலி’. 1980ல ஏற்பட்டது ரஜினி சாரோட பழக்கம். 1984ல என் முதல் படமான ‘யார்’ல ரஜினி சார் சின்ன கெஸ்ட் ரோல் பண்ணிக் கொடுத்தார். 32 வருஷங்களுக்குப் பிறகு, இன்னிக்கு ‘கபாலி’யில் ஹீரோ. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தம்!’’ – நெகிழ்வும் மகிழ்வுமாகப் பேசுகிறார் கலைப்புலி எஸ்.தாணு.

kabali-2

‘‘திட்டமிட்டபடி ‘கபாலி’ பாடல் வெளியீட்டு விழா உண்டா? அதற்கு ரஜினி வருவாரா? தலைவர் படம் எப்போ ரிலீஸ்? ரஜினியின் அமெரிக்க விசிட் எதற்காக?’’ என ரசிகர்கள் மனதில் கேள்விகள் ஆயிரம். எல்லாவற்றுக்கும் கிடைத்தன பதில்கள்!

‘‘எத்தனையோ படங்கள் பண்ணிட்டார் ரஜினி சார். இன்னமும் பிரமிக்க வைக்கிறார். நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு வந்துடுவார். ஷூட்டிங் டைம்ல சில நாட்கள் மழை. அதையும் பொருட்படுத்தாமல் வந்து நடிச்சுக் கொடுத்தார். பெரிய கேரவன் கேட்கல. சின்னதா, மெட்டடர் வேன் சைஸில் இருக்கும் ஒரு வண்டியிலேயே தங்கிக்கிட்டார். ஸ்பாட்ல சாருக்கு 150 செக்யூரிட்டிகள் போட்டிருந்தோம். ஆனாலும் தன்னைத் தேடி வந்த ரசிகர்களின் அன்பில் திளைச்சு, அவங்களோட போஸ் கொடுத்து சந்தோஷப்படுத்திப் பார்த்தார். அநேகமா ரஜினி தன் ரசிகர்களோடு அதிகமா புகைப்படம் எடுத்த நாடு மலேசியாவாதான் இருக்கும்!’’

‘மலேசிய அனுபவங்கள் பரவசம். தாய்லாந்துல என்ன ஸ்பெஷல், சொல்லுங்க?’’‘‘வெற்றி விழாவில் சொல்லலாம்னு நினைச்சேன். தாய்லாந்துல ஷூட் பண்றப்போ, அந்த நாட்டு இளவரசி ராயல் எக்ஸலன்ஸி லுஆங் ராஜதரா ஜெயன்குரா, ‘கபாலி’ ஸ்பாட்டுக்கே வந்துட்டாங்க. அவங்க பாதுகாப்பு கெடுபிடிகள் அத்தனையையும் மீறி வந்திருந்தாங்க.

kabali-1

ரஜினி சாரை அவங்க இந்தியாவின் ஐகானா பார்க்கறாங்க. கிட்டத்தட்ட அவரோட ரசிகையாகவே மாறிட்டாங்க. இளவரசிக்கு ரஜினி சார் ஒரு ஆன்மிகப் புத்தகம் கிஃப்ட்டா கொடுத்தார். அது கிட்டத்தட்ட 500 பக்கங்களுக்கும் மேல. அவங்க அன்னிக்கு ராத்திரியே அதை முழுக்க படிச்சு முடிச்சிட்டு சில டவுட்களைக் கேட்க அடுத்த நாளும் வந்துட்டாங்க. ‘எப்டி… எப்டி இப்டி படிச்சீங்க?’னு ரஜினியே ஆச்சரியப்பட்டுப் போயிட்டார். அந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் இளவரசி அனலைஸ் பண்ணி ஆராய, ஒவ்வொண்ணுக்கும் தெளிவான விளக்கம் கொடுத்தார் ரஜினி சார். கடைசியில், ‘யூ ஆர் மை ஸ்பிரிச்சுவல் குரு’னு இளவரசி நெகிழ்ந்துட்டாங்க!’’

‘‘இயக்குநர் பா.ரஞ்சித்..?’’

‘‘நான் என் நெஞ்சில் வச்சு பூஜிக்கிற இயக்குநர்களில் எஸ்.பி.முத்துராமனும் ஒருவர். அவருக்கு அடுத்ததா, பா.ரஞ்சித்தை நான் மனதார வாழ்த்துறேன். இன்னும் மூணு தலைமுறைகளைக் கடந்தும் படம் இயக்கக்கூடிய திறமைசாலி அவர். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேட்பவர். இதுக்கு முன்னாடி ரெண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். மூன்றாவது படமா ஒரு எவரெஸ்ட் சிகரத்தை இயக்கற அளவுக்கு தன்னை தகுதியாக்கிக்கிட்டவர் ரஞ்சித் தம்பி!’’‘

‘என்ன சொல்றார் சந்தோஷ் நாராயணன்?’’

‘‘பாடல்கள் நல்லா வந்திருக்குனு இப்பவே அவருக்கு பாராட்டுகள் குவியுது. ‘ ‘ரஜினி சார் படத்துக்கு நீதான் மியூசிக்’னு ரஞ்சித் என்கிட்ட சொன்னதும், என்னால நம்பவே முடியல. திடீர்னு ஒருநாள் ரஞ்சித் என்னை ரஜினி சார் வீட்டுக்கே அழைச்சிட்டுப் போயி இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டார்!’னு சந்தோஷ் நாராயணன் சந்தோஷப்பட்டார். மொத்தம் ஐந்து பாடல்கள்.

பாடல்களை கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்காங்க. ஒவ்வொரு பாடலுமே ஒவ்வொரு கான்செப்ட். நீர், நிலம், காற்று, வானம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களை உள்ளடக்கிய வடிவங்களா பாடல்கள் இருக்கும். ‘மாய நதியினிலே…’ பாடல் காலங்காலமா நிலைத்து நிற்கக்கூடிய மெலடியா வந்திருக்கு. ‘உலகம் ஒருவனுக்கா’ பாடல் நிலத்தைக் குறிக்கும். ‘வீரத்துறந்தரா…’ பாடல் மூச்சுக்காற்றையும், ‘வானம் பார்த்தேன்’ ஆகாயத்தையும் ‘நெருப்பு டா…’ அக்னியையும் குறிக்கும்!’’
‘‘இசை வெளியீடு பிரமாண்டமா நடக்குதா?’’

‘‘ரஜினி சார் ஹாலிடேவுக்காக ஃபாரின் போயிருக்கார். ஜூன் கடைசியில்தான் திரும்பி வர்றார். படம் ரிலீஸுக்கு 35 நாட்களுக்கு முன்னாடி அதோட ஆடியோவை ரிலீஸ் பண்றது தமிழ் சினிமா வழக்கம். அதன்படி, ஜூன் 12ல ஆடியோ ரிலீஸ். ரஜினி சார் வந்து விழா நடந்தால் அதோட வீச்சு வேற லெவல்ல இருக்கும். அவர் இல்லாதபோது விழா நடத்தினால் அது நிறைவு இல்லாத விழாவாகிடும். அதனால சிம்பிளா சோஷியல் மீடியாக்கள்ல பாடல்களை வெளியிடப்போறோம். படத்தோட ரிலீஸ் ஜூலையில் திட்டமிட்டிருக்கோம்!’’

‘‘ரஜினி ‘கபாலி’யைப் பார்த்துட்டாரா?’’

‘‘முழுப் படத்தையும் பார்த்த பிறகு ரஜினி சார் என்னை சந்திச்சார். ‘நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள நட்பு எத்தனை வருஷம் தாணு?’னு கேட்டார். ‘முப்பத்தஞ்சு, முப்பத்தாறு வருஷம் இருக்கும்’னு சொன்னேன். ‘நம்ம நட்புக்கு அடையாளம், ‘கபாலி’. உங்க வி.கிரியேஷனுக்கு ஒரு மகுடம்!’னு சொன்னார். அது இன்னும் என் மனசுல ஓடிக்கிட்டிருக்கு. படத்தோட வெற்றி விழாவில் ரஜினி சார் பத்தி நிறைய விஷயங்கள் பகிர்ந்துக்கப் போறேன். அதுதான் அவருக்கு நான் செலுத்தும் பதில் மரியாதையா இருக்கும்!’’

‘‘ ‘பைரவி’ படத்தை விநியோகிக்கும்போது ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’னு பட்டம் கொடுத்தீங்க. அதைப் பத்தி ரஜினி சார் உங்ககிட்ட எதுவும் பேசியிருக்காரா?’’‘‘ரஜினி சார் மனசுல என்ன இருக்குனு யாராலயும் சொல்ல முடியாது. ஆனா, ஆத்மார்த்தமா எங்களுக்குள் ஒரு பரஸ்பர நட்பு இருக்கு. உதாரணமா ஒரு சம்பவம்… ‘படையப்பா’ படத்தோட க்ளைமேக்ஸ் மைசூர்ல போயிக்கிட்டிருந்தது.

அப்போ என் மகளுக்குத் திருமணம். மைசூர்ல இருந்து கார்ல பெங்களூரு வந்து, ஃபிளைட் பிடிச்சு சென்னை வந்து கல்யாணத்துக்கு தன் மனைவியுடன் வந்திருந்து என் மகளை ஆசீர்வதிச்சார் ரஜினி சார். அதே மாதிரி என் வீட்டு விசேஷங்கள் எல்லாத்துக்கும் வந்திருந்து சிறப்பிச்சிருக்கார். சமீபத்தில் கே.எஸ்.ரவிகுமாரை சந்திச்சப்போ, ‘படையப்பா’ ஷூட்டிங் பற்றி பேச்சு வந்தது. ‘தாணு பொண்ணு கல்யாண டேட்ல சென்னை போக வேண்டியிருக்கு. அன்னிக்கு வொர்க் வைக்காதீங்க’னு ரஜினி சார் முன்கூட்டியே அவர்கிட்ட சொல்லியிருந்தாராம். கேட்க சந்தோஷமா இருந்தது. நட்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர் ரஜினி சார்!’’

‘நெருப்புடா…’ – எனர்ஜி விஜய்!வாஹினி ஸ்டூடியோவில் விஜய்-60 படத்தின் ஷூட்டிங். அந்த படத்திற்கும் இசை சந்தோஷ் நாராயணன்தான் என்பதால் விஜய்யை சந்திக்க வந்திருந்தார் சந்தோஷ் நாராயணன். ‘‘கபாலி பாடல்கள் எப்படி வந்திருக்கு?’’ என ஆர்வம் பொங்கக் கேட்டிருக்கிறார் விஜய். ‘‘என் ஐபோன்ல ஒரு பாடல் இருக்கு. கேட்குறீங்களா?’’ என சந்தோஷ் நாராயணன் விஜய்யிடம் கேட்க, குஷியாகி ‘நெருப்புடா.. நெருங்குடா’ பாடல் முழுவதையும் ரசித்துக் கேட்ட விஜய்.. செம எனர்ஜியாகி யூனிட்டில் இருந்த அத்தனை பேரிடமும் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்திருக்கிறார்!

– மை.பாரதிராஜா
படங்கள்: ஸ்டில்ஸ் ஆர்.எஸ்.ராஜா

Related Posts