“எங்களுக்கு நட்ட ஈடு வேண்டாம்; எங்கள் காணிகளே வேண்டும். இதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது”.
இவ்வாறு வலி.வடக்கு மக்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், அரசியல்வாதிகளும் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கில் 24 கிராம சேவையாளர் பிரிவுகளையும் சுவீகரித்து நட்டஈடு வழங்குவதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாகக் கேட்ட போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
வலி.வடக்கு மக்கள் மீளக் குடியமர்வுக் குழுவின் தலைவர் குணபாலசிங்கம் தெரிவிக்கையில், அரசின் இந்த நடவடிக்கையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுக்கு நட்டஈடு தேவையில்லை. எங்களின் காணிகளைத் திருப்பி எங்களிடமே தந்தால் போதும்.
நாங்கள் மீனவர்கள். நாங்கள் கடற்கரையோரம்தான் வசிக்க முடியும்.
தொண்டமனாறு தொடங்கி கீரிமலை வரை 12 கிலோ மீற்றர் நீளமான கடற்கரையோரத்தை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு அந்தக் காணிகள் ஏன் தேவை?எங்களுக்கு இவர்களின் (அரச) நட்டஈடு வேண்டாம். சொந்த மண்தான் வேண்டும் என்றார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் ஏ.யேசுதாசன் தெரிவிக்கையில், மக்களுடைய காணிகள் மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும்.மக்களுக்கு விருப்பமென்றால் நீங்கள் அவர்களின் காணிகளை எடுத்துக் கொண்டு நட்டஈடாக வழங்கலாம். ஆனால் மக்களை வற்புறுத்தக் கூடாது. மக்களுக்காகத்தான் நீங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்காக அந்த மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கக் கூடாது என்றார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகனேசன் தெரிவிக்கையில்,
இலங்கை அரசின் உண்மை முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இந்த அரசு நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களையே நடைமுறைப்படுத்தவில்லை.தொடர்ந்தும் இலங்கை அரசு தான்தோன்றித்தனமாகவே செயற்படுகின்றது. போர் நடந்த இலங்கைக்கு உதவிய இந்தியாவும், சர்வதேசமும் இலங்கையின் போக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.