நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வராததால் அஜீத்குமாருடன் கருத்து வேறுபாடா?

நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வராததால் நடிகர் அஜீத்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா? என்பதற்கு நடிகர் விஷால் பதில் அளித்தார்.

நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:–

‘‘நாங்கள் நடிகர் சங்க பொறுப்புக்கு வந்து 6 மாதங்கள் ஆகிறது. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது எங்கள் லட்சியமாக இருந்தது. அதற்கான முயற்சிகளில் இறங்கினோம்.

முதல் கட்டமாக கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. நடிகர்கள் இதில் பங்கேற்று கடும் வெயிலில் 12 மணி நேரம் கஷ்டப்பட்டு விளையாடினார்கள்.

இதன் மூலம் நடிகர் சங்கத்துக்கு ரூ.8 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ரூ.2 கோடி கடன் அடைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு உள்ளோம். கட்டிட வரைபடங்கள் தயாராகி வருகிறது.

புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.24 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே மீதி தொகையை நன்கொடைகள் மூலமும் படங்களில் நடித்தும் திரட்ட முடிவு செய்துள்ளோம்.

ரஜினிகாந்த், நடிகர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவதாக சொல்லி உற்சாகம் அளித்துள்ளார். கமல்ஹாசன் எங்களுடன் இணைந்து செயல்பட்டு உதவிகளும் ஆலோசனைகளும் வழங்குகிறார்.

நடிகர் சிம்பு நட்சத்திர கிரிக்கெட்டை விமர்சித்ததுடன் நடிகர்களை கோமாளியாகவும், காமெடியர்களாகவும் சித்தரித்து விட்டதாகவும் சொல்லி இருப்பது எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது.

நடிகர் சங்கத்தில் இருந்து விலகப்போவதாகவும் அறிவித்து உள்ளார். இது தனிப்பட்ட நபர்களின் ‘கிளப்’ அல்ல. நடிகர்களுக்கான சங்கம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறோம்.’’ இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நடிகர் அஜீத்குமாருக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் பரவி உள்ளதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து விஷால் கூறியதாவது

‘‘அஜீத்குமாருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நான் ‘சார்’ போட்டு அஜீத்தை அழைக்கவில்லை என்று விமர்சனங்கள் வந்துள்ளன. அஜீத்தை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும்.

அவர் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுபோடாமல் இருந்ததும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வராமல் இருந்ததும் அவருடைய சொந்த விவகாரம். இதற்கு அவர் விளக்கம் அளிக்க அவசியம் இல்லை.

யாரையும் கட்டாயம் வர வேண்டும் என்றும் நாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை. வந்து இருந்தால் சந்தோஷம் வராவிட்டாலும் கோபம் இல்லை.

அஜீத் பாடலை விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நான் நிறுத்தி விட்டதாக தவறான தகவல் பரவி உள்ளது. அதை பார்த்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது. நான் ஏன் அவரது பாடலை நிறுத்த வேண்டும்? அஜீத் மீது எனக்கு அன்பு இருக்கிறது.

ரஜினி, கமல், விஜய் எல்லோர் மீதும் எனக்கு அன்பு இருக்கிறது. நாங்கள் பிரச்சினை செய்ய வரவில்லை. யாருடனும் சண்டை போடவும் வரவில்லை. நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்ட வந்து இருக்கிறோம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.’’ இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.

Related Posts