Ad Widget

நடை பணயப் போராட்டம் நிறைவு – வடக்கு முதல்வருக்கு மகஜர்

ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க மாட்டோம், சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக அரசியற் தீர்வு வேண்டும், மனித உரிமைப் பேரவை மூலம் சர்வதேச நீதி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நான்கு நாற்களாக இடம்பெற்று வந்த நடை பணயப் போராட்டம் நேற்று ஐந்தாவது நாளில் நிறைவடைந்தது.

vick-cm-nadai-payanam-5th-day

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஐிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரினால் கடந்த 10ம் திகதி குறித்த போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நேற்றயதினம் கடந்த காலப் பகுதியில் பல படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட செம்மணியில் வைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதில் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஐிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போராட்டகாரர்கள் ஏ9 வீதியுடாக யாழ் நகரிற்கு வந்து யாழிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் சர்வதேச விசாரணை கோரிய மகஐரைக் கையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அதன் பிரதிகளை வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆகியவற்றுக்கும் கொடுத்து சங்கிலியன் தோப்பைச் சென்றடைந்து போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அனந்தி,

போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எதுவும் நடக்கவில்லை. எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை.

இந்த நிலையிலேயே சர்வதேச விசாரணையைக் கோரியிருக்கின்றோம். இந்த விசாரணையைக் கோருகின்ற ஐ.நாவிலேயே நான் கடந்த வருடம் எமது பிரச்சினைகைளைத் தெரிவித்து அதற்காக நீதியைக் கோரி உரையாற்றியிருக்கின்றேன்.

ஆனால் இன்று வரை இலங்கை அரசின் போர்க் குற்றம் தொடர்பில் எதனையுமே வெளிப்படுத்தாமலேயே ஐக்கிய நாடுகள் சபை இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இருந்த போதும் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்து சர்வதேச பொறிமுறையை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம், என்றார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு வழங்கப்படுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடைய கடிதமாகவே அல்லது எந்தக் கடிதமாகவே இருக்கட்டும் அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென்று கூட்;டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் உள்நாட்டு விசாரணையோ அல்லது சர்வதேசத்தின் கண்காணிப்புடானான விசாரணையோ எதிலும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணையிலேயே மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகவே சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதே அனைத்து மக்களின் வேண்டுகோள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

அந்த விசாரணையென்பது யாரையும் பழிவாங்கும் நோக்கம் கொண்டதல்ல. இங்கு இந்த நிலைமை ஏற்படக் காரணம் என்ன? இனிமேலும் ஏற்படாத வகையில் நீதியான நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாகவே அமைய வேண்டுமென்பதே ஆகும் என்றார்.

அத்துடன் இந்த நடைபயணம் இன்று யாழப்பாணத்தினை வந்தடைந்த பின்னர் இதில் கலந்துகொண்டவர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

அந்த மகஜரை பெற்றுக்கொண்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, வெளிநாட்டு நீதிபதிகளின் குழுக்கள் கொண்ட குழுவினரால் உள்ளக விசாரணை நடைபெற்றால் மட்டுமே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும். இல்லாவிட்டால் நீதி கிடைக்காது, என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உங்களின் வேதனைகளை நன்கு அறிவேன். ஆதனால் தான், காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட, இனப்படுகொலை சம்பந்தமான அறிக்கைகளையும், தீர்மானமாக நிறைவேற்றியதுடன், உரியவர்களிடம் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளோம்.

நீதிமன்றில் இருக்கும் போது, குற்றவாளிகளை விசாரித்து தண்டனைகளை வழங்குவோம், இது அரசியலுடன் சம்பந்தப்பட்டுள்ளதால், அவ்வாறு வழங்க முடியாது.

அதேபோன்று, நாட்டின் நன்மைகளை பார்த்தே நடவடிக்கை எடுக்கின்ற காரணத்தினால் தான், காணாமல் போனோர்கள் மற்றும் சர்வதேச நீதி விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றது.

அரசியல் கைதிகளை எப்போதே விடுவித்திருக்க முடியும். ஆனால், தற்போதைய அரசாங்கத்திற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, மிகப் பெரியளவிலான வெற்றியைக் கொடுத்த பட்சத்தில், அரசியல் கைதிகளை பெருவாரியாக விடுதலை செய்திருக்கலாம்.

இவ்வாறான சர்வதேச விசாரணைகள் மற்றும் போராட்டங்கள் வரும் போது, நாங்கள் அதைச் செய்கின்றோம். இதைச் செய்கின்றோம் என மழுங்கடிப்பதற்காக அனைத்து விடயங்களையும் இவ்வாறு அரசாங்கம் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையினை மேற்கொள்ளலாம் தானே என அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரிடம் வினவிய போது, சர்வதேச விசாரணையினை எடுத்தால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் தன்னிடம் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

எனவே சர்வதேச விசாரணையை மேற்கொள்ள முடியாது என்றும், அதனால் தான் இலங்கையில் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்றும் முதலமைச்சர் கூறினார்.

உள்ளக விசாரணையினை மேற்கொண்டிருந்தாலும், சர்வதேச விசாரணைக்கான பொறிமுறை ஒன்றினை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் கொண்ட குழுக்கள் உள்ளடக்கப்பட வேண்டும். உள்ளுர் நீதிபதிகளின் கருத்துக்களுக்கு மாறாக வெளிநாட்டு நீதிபதிகள் கருத்துக் கூறக் கூடிய நிலையினை அமைக்க வேண்டும்.

அத்துடன், வெளிநாட்டில் இருந்து சுதந்திரமான வழக்கு நடத்துநர் ஒருவரையும் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும்.

உள்நாட்டில் சட்டங்கள் இல்லை என்றால் அதற்கு ஏற்ற சட்டங்களை இங்கு உருவாக்க வேண்டும். இவ்வாறு வெளிநாட்டு அணுசரணையுடன், முழுமையான விசாரணை நடந்தால் மட்டுமே, தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும். இல்லாவிட்டால், நீதி கிடைக்காது.

எனவே, தான் சர்வதேச பொறிமுறையினை அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றோம். அதனை வலியுறுத்தி நீங்களும் நடை பயணத்தினை மேற்கொண்டு வந்துள்ளீர்கள். இதை உரியவர்களுக்கு அனுப்புவோம், என்று வடமாகாண முதலமைச்சர் உறுதியளித்தார்.

Related Posts