Ad Widget

நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் யதார்த்தங்களை புரிந்து கொண்டு முன்னேறி செல்வதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்

அரசியல் அழுத்தங்கள் மற்றும் பொருத்தமான அரசியல் நகர்வுகளின் மூலம் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகள், வீடுகள் என்பன அதன் சொந்தக்காரர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றது. அரசியல் அணுகு முறைகளின் மூலம் இவை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் எதிர்க கட்சித்தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

thavarasa

வடமாகாணசபையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற காணிப்பிரச்சினை தொடர்பான விசேட அமர்வின் போது உரைநிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டைப் பொறுத்தளவில் யுத்தம் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டு அரச படைகளின் வசமாக 126.03 சதுர கிலோ மீற்றர் அதாவது 31,091 ஏக்கர் நிலப்பரப்பும், 1120 வீடுகளும் இருந்தன. இதில் வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 15,781 ஏக்கர் நிலமும் 64 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் அவர்கள் வசம் இருந்தன.

யாழ்ப்பாணத்தின் மொத்த நிலப்பரப்பு 2,42506 ஏக்கர் அதா வது 983.06 சதுரக்கிலோ மீற்றர் இதில் 12.8 வீதம் இராணுவம் வசமும் அதற்கு மேலதிகமாக 1120 வீடுகள் இராணுவம், கடற் படை, மற்றும் பொலிஸாரின் பாவனையில் இருந்துள்ளது.

இந்த அரசியல் அணுகுமுறைகள் மூலம் 5 வருடகாலத்தில் 70.9 சதுர கிலோமீற்றர் 17,503 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது அதிலும் உயர்பாதுகாப்பு வலயத்தில் 37 சதுரகிலோ மீற்றர் அதாவது 9,128 ஏக்கர் நிலமும், 647 வீடுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் படைகள் வசம் நிலங்கள், வீடுகள் இருக்கின்றன.

55.08 சதுர கிலோ மீற்றர் அதாவது 13.588 ஏக்கர் நிலம், அதிலும் உயர்பாதுகாப்பு வலயத்தில் 5,921 ஏக்கர் அளவில் தான் இப்போது அரச படைகள் வசம் தனியார் காணிகள் இருக்கின்றன. இது யாழ்ப்பாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.6 வீதம் ஆகும்.

இந்த ஆதாரங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு நிறுவனம் இந் நிலங்கள் தொடர்பில் வரைபடம் வெளியிட்டுள்ளது. அத்துடன் அரச அதிகாரிகளிடமும் இத்தரவுகள் குறித்து நான் தரவுகளைப் பெற்றுள்ளேன். 2009 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக இவை விடுவிக்கப்பட்டு வருகின்றன. அதில் முன்னேற்றமும் இருக்கின்றது.

அரச படைகளிடம் இருந்த காணிகளில் 12.8 வீதத்திலிருந்து 5.6 வீதம்வரை நிலப்பரப்பு மீள வழங்கப்பட்டுள்ளது. 1120 வீடுகளில் இருந்த படைகள் 480 வீடுகளில் இருக்கிறார்கள் இது படிப்படியாக இடம்பெறுகின்றது. அதற்காக படையினர் வீடுகளில் இருப்பது சரி என்று சொல்லவில்லை. தனியாரது காணிகள் அவர்களிடம் தான் வழங்கப்படவேண்டும் என்பது எனது நிலைப்பாடு அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதே இங்கு முக்கியமாகின்றது. இவ்வாறே முல்லைத்தீவின் மொத்தக் காணியில் 5.5 வீதம் மட்டுமே படையினர் இருக்கின்றனர். மன்னாரிலும் அவ்வாறே.

அன்று சந்திரிகா அம்மையாரினால் காணி சுவீகரிப்பு தொடர்பாக அறிவிக்கப்பட்டபோதிலும் அவருடன் அணுகி நாம் அதை நிறுத்தினோம். இது மட்டுமல்ல 556 ஏக்கரில் கிளிநொச்சியில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. எப்படி? அதுவும் சரியான அணுகு முறையில் தான் வெற்றியளித்தது. சரியான அணுகுமுறை மூலம் தான் இவ்வாறான காணிப்பிரச்சினைக்கு சரியான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

கௌரவ முதலமைச்சர் அவர்கள் தனது உரையில் 1505 ஆம் ஆண்டு இந்த மண்ணில் போத்துக்கேயர் காலடிவைத்த காலத்தில் தான் அரச காணியென்ற ஒருவிடயம் உருவாகியது என்றும் அவர்கள் எமது மக்கள் வாழ்ந்த காணிகளை அரச காணி என்று முத்திரை குத்தி அதன்பின் ஒல்லாந்தரிடம் மாறி அதன்பின் பிரிட்டிஸ் மாறி தற்போது இலங்கை அரசிடம் மாறியது. எனவே அரச காணி என்பது மக்களின் காணியெனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் நாம் சரித்திரத்தை பின்னோக்கி செல்வதன் மூலம் எமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

கௌரவ முதலமைச்சர் அவர்களின் வாதத்தை ஏற்றுக் கொள்வதாயின் 1492 இல் தான் கொலம்பஸ் முதன் முதல் அமெரிக்கா சென்றிருந்தார். அதன் பின்னர் செவிந்தியர் வாழ்ந்த பிரதேசமாக அமெரிக்கா மாறியது.

1717 இல் கப்டின் குக் அவுஸ்திரேலியா சென்ற பின்பு தான் பூர்வீக குடிகள் வாழ்ந்த நிலம் அவுஸ்திரேலிய நிலமாக மாறியது.

கௌரவ முதலமைச்சரின் விவாதத்தை ஏற்பதாயின் அமெரிக்கர் அமெரிக்காவை விட்டும், அவுஸ்திரேலியர் அவுஸ்திரேலியாவை விட்டும் வெளியேற வேண்டும்.

ஆதலால் நாம் பின்னோக்கி செல்லாமல் நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் யதார்த்தங்களை புரிந்து கொண்டு முன்னேறி செல்வதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து இச்சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வணக்கஸ்தலங்களுடைய காணிகளில் சுமார் 2146 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதேபோல் வடக்கு மாகாணத்தில் யாழ்.மாநகர சபை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வணக்கஸ்தலங்களுடைய காணிகளில் மக்கள் வாழ்ந்து வருகின்ற மக்களின் புள்ளிவிபரங்களை ஆய்வு செய்து அக்காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு காணி உரித்தாக்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்காணிகளில் குடியிருப்பவர்களுக்கு காணி உறுதிகள் இல்லாத காரணத்தினால் இம்மக்கள் வீட்டுத்திட்டங்கள், வீடு திருத்தம், மின்சாரம் உட்பட ஏனைய வசதிகளை பெற முடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவும் தெரிவித்தார்

Related Posts