எமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் காவல்துறையினரிடம் முறையிட செல்வோம் இங்கே பொலிசாரே பிரச்சனை என்றால் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் உள்ளது என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு நேற்ற்ய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
இராணுவ ஆக்கிரமிப்பில் 26 வருடங்களாக காணப்பட்ட காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி இராணுவத்தினரால் 2016 ஆம் ஆண்டு மாசி மாதம் கையளிக்கப்பட்டு பாடசாலை மீள ஆரம்பிக்க ப்பட்டு உள்ளது. தற்போது இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் பாடசாலை கிணறு மற்றும் பாடசாலை கட்டடம் ஒன்றினை காவல்துறையினர் இன்னமும் மீள கையளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீரை பெறுவதற்கு சிரமங்களை எதிர்நோக்கு கின்றார்கள்.
காவல்துறையினர் தமக்கு தேவையான நீர் மூலங்களை தேடிக்கொள்வது அவர்களது பிரச்சனை அதற்காக பாடசாலை கிணற்றினை கையகப்படுத்தி , வைத்திருப்பது சட்ட முரணாது. வேறு நபர்கள் அவ்வாறு சட்ட முரணாக நடந்து கொண்டால் காவல்துறையினரிடம் முறையிடலாம் ஆனால் இங்கே காவல்துறையினரே சட்ட முரணாக நடந்து கொள்ளும் போது யாரிடம் முறையிடுவது.
மாகாண காவல்துறை அதிகாரம் எங்கள் கையில் உள்ளது என வெறுமன கூறிக்கொண்டு இருக்காது. பாடசாலை கிணற்றையும் கட்டடத்தையும் பொலிசாரிடம் இருந்து விரைந்து மீட்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.