நடிகர் சங்க பொதுக்குழு 20-ந்தேதி கூடுகிறது ரஜினிகாந்த்-கமல்ஹாசன் உள்பட 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு

நடிகர் சங்க பொதுக்குழு வருகிற 20-ந் தேதி கூடுகிறது. இதில் பங்கேற்க ரஜினிகாந்த் உள்பட 3 ஆயிரத்து 200 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். இதுவரை 5 முறை செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்கள் பற்றிய குடும்ப விவரங்கள், திறமைகள் போன்றவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு முந்தைய நிர்வாகத்தால் தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம், ரூ.2 கோடியே 48 லட்சம் கொடுத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போது நடிகர் சங்கமே தியாகராயநகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.

கட்டிட நிதி திரட்டுவதற்காக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 10-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்டிட வரைபடங்கள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 20-ந் தேதி மதியம் 12 மணிக்கு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய நிர்வாகத்தின் முதல் பொதுக்குழு என்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, காஜல் அகர்வால் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. மொத்தம் 3,200 பேருக்கு அழைப்பு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து நடிகர்-நடிகைகளும் பொதுக்குழுவில் கலந்துகொள்ள வசதியாக வருகிற 20-ந் தேதி படப்பிடிப்புகளை ரத்து செய்யும்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்புக்கும் வேண்டுகோள் விடுத்து நடிகர் சங்கம் கடிதம் அனுப்பி இருக்கிறது.

பொதுக்குழுவில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது பற்றிய முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கட்டிடபணிகளை பொறுப்பேற்று செய்ய சிவகுமார், சத்யராஜ் உள்ளிட்ட மூத்த நடிகர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவுக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படுகிறது.

சென்ற நிர்வாகத்தினர் கணக்குகளை ஒப்படைக்கவில்லை என்று ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்தும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படுகிறது.

Related Posts