நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்றனர்

நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால், சில காரணங்களால் ரஜினியும், கமலும் குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத காரணத்தால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் முதல் செங்கலை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

பின்னர், நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு செங்கல் கொடுக்கப்பட்டு, அவர்களும் அடிக்கல்லை நாட்டினர். ரஜினி, கமல் இவ்விழாவில் தாமதமாக கலந்துகொள்வார்கள் என்று கூறினர். இந்நிலையில், சரியாக 11.30 மணியளவில் இந்த விழாவில் கமல் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

மலேசியா பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு 12.00 மணிக்கு நடிகர் சங்க வளாகத்துக்கு வருகை தந்த ரஜினியும், புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இதையடுத்து கமல் பேசும்போது, நடிகர் சங்க கட்டடம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த கட்டிடம் கலைஞர்களின் கோட்டையாக மாறும் என்றும் கூறினார்.

பின்னர் ரஜினி பேசும்போது, அடிக்கல் நாட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது, இனி அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும் என்று பேசினார்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஜீவா, பிரகாஷ் ராஜ், விஜயகுமார், செந்தில், நடிகைகள் சிம்ரன், கோவை சரளா, சோனா, சாக்ஷி அகர்வால், நந்திதா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Related Posts