நடிகர் ‛காதல் தண்டபாணி மாரடைப்பால் காலமானார்!

காதல்’ படத்தில் அறிமுகமான நடிகர் தண்டபாணி, சென்னையில் மாரடைப்பால் நேற்று (ஜூலை 20ம் தேதி) காலமானார். அவருக்கு வயது 71. இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் அறிமுகமானவர் நடிகர் தண்டபாணி.

kadal-thandapani

முதல்படத்திலேயே கொடூர வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர், முதல்படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைய தண்டபாணி என்ற அவரது பெயரோடு ‛காதல்’ பட தலைப்பு ஒட்டிக்கொண்டது.

இதனால் பின்னர் ‛காதல்’ தண்டபாணியாக சினிமாவில் வலம் வந்தவர், தொடர்ந்து இங்கிலீஸ்காரன், முனி, சித்திரம் பேசுதடி, மலைக்கோட்டை, கச்சேரி ஆரம்பம், குட்டி பிசாசு, மாப்பிள்ளை, தில்லாலங்கடி, வேலாயுதம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். வில்லனாக மட்டுமல்லாமல் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் தண்டபாணி. கடைசியாக தமிழில், இவர் நடிப்பில் காந்தர்வன் என்ற படம் ரிலீஸானது. இதன்பிறகு சரத்குமாரின் சண்டமாருதம் படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில், சென்னையில், சாலி கிராமத்தில் வசித்து வந்த தண்டபாணிக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, இதனையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.

நேற்று முன்தினம் வரை சரத்குமாரின் சண்டமாருதம் படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் அவரது திடீர் மறைவு, திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தண்டபாணியின் உடல், அவரது சொந்த ஊரான திண்டுக்கலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.அவரது இறுதிசடங்கு இன்று (ஜூலை 21ம் தேதி) நடைபெறுகிறது.

முன்னதாக அவரது உடலுக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சமுத்திரகனி, டெல்லி கணேஷ், இயக்குனர் வெங்கடேஷ், உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் சங்க, சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Posts