நடிகர் கவுண்டமணி போலீசில் புகார்

சமூக வலைதளங்களில், தன்னை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நடிகர் கவுண்டமணி சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.கோவை மாவட்டம், வல்லகுண்டாபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி நகைச்சுவை நடிகர். அவர் நடித்த நாடகம் ஒன்றில், ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலம். இதனால் அவர், கவுண்டமணி என, அழைக்கப்பட்டார்.

கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில், நடிகர் செந்திலுடன், அவர் இணைந்து நடித்த, இந்த வாழைப்பழம் எத்தன ரூவா… என்ற நகைச்சுவை காட்சி, வயிறு குலுங்க சிரிக்க வைக்க கூடியவை. சென்னை தி.நகரில், குடும்பத்தாருடன் வசித்து வரும் கவுண்டமணி, மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என, அவ்வப்போது, சமூக வலைதளமான பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டரில் தகவல்கள் பரவி வந்தன. இரு தினங்களுக்கு முன், மீண்டும், அதுபோன்ற வதந்தி பரவியது.

இதனால், கவுண்டமணியின் உறவினர்கள், ரசிகர்கள், அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க துவங்கினர். அவர்களுக்கு பதில் சொல்லியே, கவுண்டமணி களைத்து போனதாக கூறப்படுகிறது. வதந்தி பரப்புவோர் மீது, நடவடிக்கை கோரி, கவுண்டமணி சார்பில், வழக்கறிஞர் சசிகுமார் என்பவர், நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் தமிழ் திரைபடங்களில், 40 ஆண்டுகளாக, காமெடி நடிகராக இருந்து வரும், கவுண்டமணி, மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என, சமூக வலைதளான பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டரில் விஷமிகள் வதந்தி பரப்பி வருகின்றனர்.

இதனால், அவரது குடும்பத்தார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். கவுண்டமணியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்க முயலும் விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Posts