நடன ஆசிரியையின் சகோதரியின் குடும்ப விடயத்தில் தலையிடக் கூடாது என ஈபிடிபி உறுப்பினர்கள் இருவரை எச்சரித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இனி எந்தப் பிரச்சினையும் இடம்பெறாது என தெரிவித்திருந்தார் என்ற விடயம் பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாள்வெட்டுக் கும்பல், ஆசிரியையும் அவரது தாயாரையும் கடுமையாகத் தாக்கியிருந்தது. இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.
“வாள்வெட்டுக் கும்பலின் இலக்கு ஆசிரியையின் சகோதரிதான். ஆனால் அவர் வீட்டுக்குள் ஒளிந்துகொண்டதால், ஆசிரியையை அந்தக் கும்பல் தாக்கிவிட்டது. ஆசிரியையின் சகோதரியின் கணவரின் முதலாவது மனைவி சுவிஸில் வசிக்கிறார். அவரின் ஏற்பாட்டிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றது” என்று ஆரம்ப விசாரணையின் பின்னர் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பொலிஸாரின் விசாரணையில் புதிய தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது.
“கொக்குவில் ஆசிரியையின் வீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈபிடிபி உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு இருவர் சென்றுள்ளனர்.
வெளிநாட்டு அன்ரி சொல்லி வந்தோம் என்று அவர்கள் அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டுள்ளனர். அதனை அறிந்த அயலவர்களும் அந்த ஊர் மக்களும் அவர்களில் ஒருவரை பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஈபிடிபி உறுப்பினரையும் ஆசிரியையின் சகோதரியையும் அழைத்து சமாதனாப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
ஆசிரியையின் வீட்டுகார்கள் இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
அவர்களின் முறைப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் இருவரையும் அழைத்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, அந்தக் குடும்பத்துடன் எந்த தகராறுக்கும் போகக் கூடாது என எச்சரித்திருந்தார்.
அத்துடன், இவ்வாறான எந்த அச்சுறுத்தல்களும் இனி ஏற்படாது எனவும் அந்தக் குடும்பத்தினரிடம் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்” என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.