த.தே.கூ மீது தாக்குதல்: மூவருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரை படுகொலை செய்ததுடன் 20 பேர் வரை காயமடைந்தனர்.

குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று எதிரிகளுக்கும் இரட்டை மரண தண்டனையும் பத்து வருட சிறைத் தண்டனையும் விதிக்க வேண்டும் என்று சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி அரச சட்டவாதி யாழ்ப்பாண மேல் நீதிமன்றுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதனையடுத்து இனங்காணப்பட்ட 3 எதிரிகளுக்கும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இரட்டை மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் எதிரிகள் மூவருக்கும் 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.

தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆதரவாளர்கள் பலர் ஊர்காவற்துறைப் பிரதேசத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றவேளையில், நாரந்தனையில் இடைமறித்து இனந்தெரியாதோர் தாக்குதல் நடாத்தியிருந்தனர்.

இத்தாக்குதலில் இரண்டு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் காயமடைந்தனர்.

15 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவமானது சட்டமா அதிபரால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர் பாரப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Posts