தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இல்லாதவர்கள் குறுக்குவழியிலேனும் வெற்றியை அடையத் துடிப்பார்கள் : பொ.ஐங்கரநேசன்

விளையாட்டுப் போட்டிகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரம் அல்லாமல் மன ஆரோக்கியத்துக்கும் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. வெற்றியைக்கண்டு துள்ளாமலும் தோல்வியைக்கண்டு துவழாமலும் வெற்றியையும் தோல்வியையும் ஓரே மாதிரி நோக்கும் மனப்பாங்கைச் சிறு வயதில் இருந்தே வளர்த்தெடுப்பதற்கு விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு இல்லாதவர்கள் எந்தக் குறுக்கு வழியிலேனும் வெற்றியை அடையத் துடியாய்த் துடிப்பார்கள், இவர்கள், கால் தடம் போட்டு, பண ஆசையையும் பதவி ஆசையையும் காட்டி, பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வெற்றியைப் பெற்றாலும் அந்த வெற்றியைத் தொடர்ந்தும் இவர்களால் தக்கவைக்க முடியாது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (16.02.2018) நடைபெற்றது. பாடசாலை அதிபர் க.புஸ்பராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளைப் புத்தகப் பூச்சிகளாகவே வளர்த்தெடுக்க விரும்புகிறார்கள். விளையாட்டுப்போட்டிகள் உட்பட வேறு எந்த இணைபாட விதானச் செயற்பாடுகளிலும் தங்கள் பிள்ளைகள் பங்கேற்பதை இவர்கள் விரும்புவதில்லை. வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டால் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுக் கல்வியில் பின்தங்கிவிடுவார்கள் என்பதே இவர்களது கருத்தாக இருக்கிறது. உண்மையில் இது தவறான அபிப்பிராயம் ஆகும்.

பரீட்சையில் வெற்றி பெறுவதற்குப் புள்ளிகள் உதவலாம். ஆனால், ஒருவர் வாழ்க்கையில் முழுமை பெறுவதற்கோ அல்லது வெற்றிபெறுவதற்கோ இந்தப் புள்ளிகள் மாத்திரம் போதாது. இந்த உலகம் போட்டிகளால் நிறைந்தது. விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொருவரும் எண்ணற்ற போட்டிக்கதவுகளைத் திறந்து உள்நுழைந்து வெளியேற வேண்டியவர்களாகவே உள்ளோம். இவற்றை எதிர்கொள்வதற்குத் தற்துணிவு அவசியம். ஒரு தடவை தோல்வியைத் தழுவினாலும் மனம் இடிந்துபோய் உட்கார்ந்து விடாமல் மீளவும் அடுத்த சுற்றுக்குத் தயாராக வேண்டும். அதே சமயம், இலக்கை எட்டுவதற்கு நேர்மையான அணுகுமுறைகளும் அவசியம். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அறம்பிறழாத வகையில் செயற்படவேண்டும். இந்த நற்பண்புகளை விளையாட்டுப் போட்டிகளும் ஏனைய இணைபாடவிதானச் செயற்பாடுகளும் சிறுவயதுமுதலே கற்றுத்தருகின்றன.

பரீட்சையில் உயர்புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் பலர் இணைபாடவிதானச் செயற்பாடுகளிலும் முன்னணியில் உள்ளார்கள். இவர்களின் வெற்றிக்கு அவர்கள் ஒவ்வொன்றிலும் காட்டுகின்ற ஈடுபாடும் நேர ஒதுக்கீடுமே காரணங்கள். இவற்றைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு தங்கள் பிள்ளைகளைக் கற்றலுடன் சேர்த்து ஏனைய செயற்பாடுகளிலும் பங்கேற்பதற்கான ஊக்குவிப்பை வழங்கவேண்டும். அப்போதுதான் அந்தப் பிள்ளைகளால் எதிர்காலத்தில் முழுமையான மனிதர்களாக உயர்ந்து நிறைவான வாழ்க்கையை வாழமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts