பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றதற்கு காரணம் களத்தடுப்பாளர்கள்தான் என்று தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் போட்டி குறித்து விளக்கமளிக்க அந்தந்த அணியின் வீரர் ஒருவர் அழைக்கப்படுவார். அந்த வகையில் இந்தப் போட்டி குறித்து பேச சந்திமால் வந்திருந்தார்.
அவரும் தோல்விக்கு காரணத்தை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஒவ்வொரு ரசிகனுக்கும் பார்வையாளனுக்கும் தேவை போட்டியில் வெற்றியே தவிர தோல்விக்கான காரணங்கள் அல்ல.
ஒவ்வொரு முறை தோற்கும்போது துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு, அல்லது ஆடுகளம் எமக்கு கைகொடுக்கவில்லை. இப்படி இதில் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். தோல்விக்கு காரணத்தை ரசிகர்கள் கேட்கவில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு போட்டியை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே.
இவ்வளவு நீண்ட விளக்கத்தைக் கொடுக்க காரணம் பங்களாதேஷ் அணி முதன் முதலாக இலங்கை அணிக்கெதிராக முதலில் துடுப்பெடுத்தாடி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோல் முதல் முறையாக சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தியிருக்கிறது.
தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தமீம் இக்பால் பெற்ற சதத்தால் இலங்கையை 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பங்களாதேஷ். இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இலங்கை அணி விட்ட முதல் பிழையே இதுதான். தனது சொந்த மைதானத்தில் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்துகொள்ளாமல் ஆரம்பத்தில் விட்ட பிழை முடிவில் தோல்விக்கு இட்டுச்சென்றது. அதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இலங்கை அணியின் பந்துவீச்சை மிகவும் இலகுவாக ஆடியது.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களும் தொழில்நுட்ப ரீதியாக பந்துவீசவில்லை என்றே சொல்லலாம். ஏதோ 50 ஓவர் களையும் வீசி முடிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர்களிடம் இருந்ததைப் போலத்தான் தெரிந்தது. சந்திமால் குறிப்பிட்டது உண்மைதான். இலங்கை அணியின் களத்தடுப்பு மிக மிக மோசமாக இருந்தது.
பங்களாதேஷின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தமீம் இக்பால் 47ஆவது ஓவர் வரை களத்தில் நின்று 127 ஓட்டங்களை விளாசினார். சபீர் ரஹ்மான் (54), சஹிப் அல் – ஹசன் (72) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 324 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் 325 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்ததால் 45.1 ஓவர்களில் 234 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக சந்திமால் (59), திஸர பெரேரா (55) ஓட்டங்களைப் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.
சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணிக்கெதிராக ஒருநாள் போட்டியை தோற்றிருப்பது இலங்கை அணிக்கு மிகப்பெரிய அடி. இன்னும் இரண்டு மாதங்களில் சம்பியன்ஸ் கிண்ணம் நடைபெறவுள்ளது. பங்களாதேஷ் தொடரை அதற்கான பயிற்சி ஆட்டமாகக் கூட எடுத்து ஆடியிருக்கலாம்.
ஆனால் இலங்கை அணியின் அசமந்தப் போக்கினால் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் தகுதிகாண் சுற்றில் ஆடி பிரதான சுற்றுக்கு முன்னேற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்தத் தோல்வியை பாடமாகக் கொண்டு அடுத்த இரண்டு போட்டிகளையும் இலங்கை அணி வெற்றி கொண்டு தொடரை வெல்லுமா என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆட்ட நுட்பத்தையும் திறனையும் மாற்றிக்கொள்ளுமா இலங்கை அணி? பொறுத்திருந்து பார்ப்போம்.