தோண்டியெடுக்கப்பட்டது தாஜுதீன் சடலம்!! மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டத்தில்!!

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட ரக்பி வீர்ர் வசீம் தாஜுதீனின் புதைகுழி இன்று தோண்டப்பட்டு, அவரது சடலத்தின் எஞ்சிய பாகங்கள் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

tajudeen-body-1

வசீம் தாஜுதீன் விபத்தில் மரணமாகவில்லை என்றும் அது ஒரு கொலை என்றும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், தாஜுதீனின் உடலைத் தோண்டியெடுத்து பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இதற்கமைய தெகிவளை முஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த தாஜுதீனின் புதைகுழி சட்டமருத்துவ அதிகாரி, நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் தோண்டப்பட்டது.

புதைக்குழி தோண்டப்பட்ட போது, குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட வெளியார் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டின் எச்சங்கள், சட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அதேவேளை, இந்த தாஜுதீனின் புதைகுழி தோண்டப்பட்ட போது, தெகிவளை பள்ளிவாசல் முன்பாக, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கொலை மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. எனினும், அதனை மகிந்த ராஜபக்சவும், நாமல் ராஜபக்சவும் நிராகரித்திருந்தனர்.

மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவின் நண்பியுடன் தாஜுதீன் கொண்டிருந்த காதலின் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

சிராந்தி ராஜபக்சவின் தொண்டர் நிறுவன வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பின்னர், விபத்து ஒன்றில் காருடன் எரிந்து மரணமானதாக சித்திரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுக்கிறது.

இந்தக் கொலையில் சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மூவருக்குத் தொடர்பிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அதிபர் பாதுகாப்புப் பிரிவும் கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts