மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் சுதந்திர வர்த்த வலையங்கள் அமைத்து நகரங்களில் தொழில்பேட்டை அமைத்து இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். – இவ்வாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் பிரசாரக் கூட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை நகர பஸ்நிலையம் முன்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது –
‘உங்கள் பிரச்சினை எங்கள் தீர்வு’ எனும் தொனிப்பொருளினாலான தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது.
இதில் மக்களின் பிரச்சினைகள் தீர்ப்பதற்கான அணுகுமுறைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு திருகோணமலை இணைக்கும் வலையம் வெலிக்கந்தையில் நிர்மாணம் செய்யப்படும். தொழில் பேட்டைகளில் தொழில் புரிவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவுள்ளன. முதலில் அரச காணிகளில் வீடுகள் அமைத்து தற்காலிக அனுமதிப் பத்திரம் உள்ளவர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் காணிக்கான உறுதிகள் வழங்கப்படும்.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மீன் நிறுத்தப்பட்டுள்ளது மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களுக்கு உதவும் நோக்கில் மீண்டும் ஓக்ரோபர், நவம்பர் மாதமளவில் மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படும்.
தெற்கிகைப்போல் வடக்கு, கிழக்குக்கும் அபிவிருத்தி, 10 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு, சுதந்திரவர்த்தவலையம் அறிமுகம், சீனாவின் உதவியோடு கிழக்கு மாகாணம் சம்பூரில் அனல் மின்சாரம் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் உள்ள விவசாயக் காணிகளுக்கு மகாவலித் திட்டத்தினால் விவசாயத்தைப் பெருக்கும் வேலைகள் செய்யப்படவுள்ளன.
கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கோடு கணனி மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வி என்பன அறிமுகப்படுத்தப்படும்.
அதுபோன்று பொலன்நறுவை, அனுராதபுரம், வன்னி மாவட்டங்களிலும் இத்தகைய வர்த்தக வலயங்கள் உருவாக்கம்பெற்று வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
நாடு லஞ்சம், ஊழலில் மூழ்கியிருந்து போது அதை மாற்றும் நோக்கில் கடந்த 10 வருடங்களாக நடந்த மகிந்தவின் குடும்ப ஆட்சியை சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் அப்போதைய செயலாளரவிருந்த மைத்திரியை ஜனதிபதி தேர்தலில் போட்டியிடவைத்து வெற்றிபெற்றோம்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடையச் செய்து இவ்வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு உதவவேண்டும் – என்றார்.