தொல்பொருட்கள் மீட்கப்படாமல் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்பு

வடபகுதியில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளும் போது, அபிவிருத்தி வேலை மேற்கொள்ளும் இடத்தில் இருக்கும் தொல்பொருட்கள் மீட்கப்படாமல் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவது ஏன்? என்று யாழ். பல்கலைக்கழக பதில் வரலாற்றுத்துறை தலைவர் செ.கிருஸ்ணராஜா வெள்ளிக்கிழமை (28) கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுவாக எந்தவொரு இடத்திலும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் போதும் அந்த இடத்தின் தொன்மை மற்றும் தொல்பொருள் எச்சங்கள் மீட்கப்பட்ட பின்னரே, அந்த வேலைகள் மேற்கொள்ளப்படும்.

தென்பகுதியில் மேற்கொள்ளும் ஒவ்வொரு அபிவிருத்தியும் தொல்பொருட்கள் மீட்கப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்படுகின்றன.

வடபகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைகளின் போது, அவ்விடங்களில் காணப்பட்ட தொல்பொருட்கள் மீட்கப்படாமலேயே அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சாவகச்சேரி நீதிமன்றம் அமைக்கும் போது, அவ்விடத்தில் இருந்து வாரிவள நாதேஸ்வரர் கோயில் எச்சங்கள் வெளிவந்தன. அதேபோல, யாழ்.கல்வி வலய அலுவலகம் அமைக்கும் போது, அவ்விடத்தில் நல்லூர் ஆலயத்துக்குரிய சிறப்பங்கள், கட்டட எச்சங்கள் வெளிவந்தன.

ஆனால், இவைகள் எதுவும் மீட்கப்படாமல் கட்டட பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இது போல பல அபிவிருத்தி வேலைகள் தொல்பொருள் எச்சங்கள் மீட்கப்படாது முன்னெடுக்கப்படுகின்றன.

இது போன்ற அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படும் போது தொல்லியல் துறையினருடன் பேசி ஆலோசனை பெற்ற பின்னர் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Related Posts