கடந்த காலங்களில் எதற்கும் அஞ்சாத தோரணையில் கம்பீரமாக தனது பிரதிமையை காண்பித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, ராஜபக்ஷ தேர்தல் மேடையில் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
பிலியந்தலவில் கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் கைத்தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என அந்த அழைப்பினூடாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கைத்தொலைபேசி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
அப்போது அங்கு மிகுந்த கலவரமடைந்தவராக முன்னாள் ஜனாதிபதி பதற்றத்துடன் தமக்கு முன்பாக கூடியிருந்த மக்களையும் ஊடகவியலாளர்களையும் மறந்து உரையாடியதைக் காணமுடிந்தது.
சில நிமிடங்களில் கூட்டத்திலிருந்து இடைநடுவில் ஜனாதிபதி தமது ஆதரவாளர்களுடன் வெளியேறிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கூட்டத்தில் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் பலமான கோரிக்கை காரணமாகவேதான் இம்முறை தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தார் எனத் தெரிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறவே தான் தயாராக இருந்தார் எனவும் எனினும் மக்கள் அதற்கு இடமளிக்கவில்லை எனவும் மஹிந்த இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.