தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரைக் கூறி யாழில் மோசடி!

இலங்கையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் மடத்தடிப் பிரதேசவாசி ஒருவர் 36,000 ரூபா பணத்தை இழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த நபர் தெரிவித்திருப்பதாவது,

நேற்று முன்தினம் எனது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. நாம் குறித்த தொலைபேசி நிலையத்திலிருந்து கதைக்கின்றோம். உங்களுக்கு 10 மில்லியன் ரூபா சீட்டிழுப்பு மூலம் கிடைத்துள்ளது. அதனைப் பெறுவதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மூன்று கையடக்க தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு அவற்றிக்கு தொலைபேசி மூலமான பணப்பரிமாற்றதுக்கு 30 ஆயிரம் ரூபா பணத்தை வைப்பிலிட கூறியுள்ளனர். அத்துடன் 100 ரூபா பெறுமதியான 10 மீள் நிரப்பு அட்டைகளது இலக்கங்களையும் தமக்கு அனுப்புமாறு கூறினர்.

இதன் பின் குறித்த தொலைபேசி நம்பருக்கு அழைப்பை ஏற்படுத்தியபோது அது பாவனையில் இல்லை எனத் தெரிவித்தது. இதன்பின்னரே நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் எனத் தெரியவந்தது எனத் தெரிவித்தார்.

குறித்த சம்பவம்போல் நாடுமுழுவதும் பல சம்பவங்கள் நடைபெற்றுவருவதாகவும், மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் குறித்த தொலைத்தொடர்பு நிறுவனம் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Related Posts