தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அப்பட்டியலில் முறைகேடான வகையில் பெயர் விபரம் இடம்பெற்றுள்ளதாக தொண்டர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இப்பெயர்ப் பட்டியலில் 277 பேருடைய பெயர் விபரங்கள் அடங்கியுள்ள போதிலும், 200க்கு உட்பட்ட ஆசிரியர்களே தொண்டர் ஆசிரியர்களாக பாடசாலைகளில் பணிபுரிந்து வருவதாகவும்,பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியராக பணிக்குச் செல்லாதவர்கள் கூட தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்ததாக பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பாடசாலைகளிலுள்ள அதிபர்களே முக்கிய காரணமாகவுள்ளதாகவும், பாடசாலைக்கு தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரியாதவர்களையும் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்தார்கள் என தவறாக பெயர் விபரங்களை வலயக் கல்விப் பணிமனைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள தொண்டர் ஆசிரியர்கள், பாடசாலைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் தொண்டர் ஆசிரியர்களை விடுத்து சட்டத்திற்கு முரணான வகையில் அதிபர்களின் துணையுடன் தொண்டர் ஆசிரியர்கள் என பெயர்களை பதிவு செய்தவர்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டோர் விசாரணைகளை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts