காலாவதியான மருந்துப் பொருள்கள், ஆயிரத்துக்கும் மேலான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன்கள், ஊசிவகைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் கடந்த மூன்று நாள்களாக வடமராட்சி தொண்டமானாறு கடற்பரப்பில் கரையொதுங்குகின்றன. இவை ஆபத்தான மருத்துவக் கழிவுகளா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அந்தப் பொருள்கள் இந்தியாவிலிருந்தே இங்கு வருகின்றன என சுகாதாரப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். பொருள்களில் உள்ள இந்திய அரச முத்திரைகள், அங்குள்ள வர்த்தக நிலை யங்களின் பெயர்களை வைத்தே அவர்கள் இவ்வாறு சந்தேகிக்கின்றனர்.
கரையொதுங்கும் மருத்துவக் கழிவுகள் தொண்டமானாறு மீனவர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மருத்துவக் கழிவுகள் படகுகளில் எடுத்துவரப்பட்டு நடுக் கடலில் கொட்டப்படுகின்றனவா என்கிற சந்தேகத்தையும் இது கிளப்பிவிட்டுள்ளது.
‘கழிவுப் பொருள்கள் கடற்கரையில் கரையொதுங்குவதால் கடற்பரப்பை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். கடற்கரை முழுவதுமே குப்பைமேடாகக் காணப்படுகின்றது. கடல் வளம் பாதிப்படைகின்றது. மீன் இனம் அழிவடைகின்றது” என்கின்றனர் கடற்றொழிலாளர்கள். வடமராட்சியின் ஏனைய கடற்பரப்புக்களிலும் இவ்வாறான கழிவுப் பொருள்கள் கரையொதுங்குகின்றன. ஆயினும் இந்தக் கடற்கரையிலேயே அதிகமாகக் கரையொதுங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
‘இவ்வாறு மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவது குறித்து இதுவரை எமக்கு அறிவிக்கப்படவில்லை. எனினும் இது பற்றி ஆராயப்படும்’’ என வடமராட்சி நகர சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.