வடக்கு மாகாணத்தில் 182 தொண்டர் ஆசிரியர்களை மட்டும் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கு கொழும்பு கல்வி அமைச்சால் வழங்கப்பட்ட அனுமதி தொடர்பில் வடக்கு மாகாண சபை சீராய்வு செய்த பின்னரே அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த அமர்வில் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுல ராஜா, “தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் குளறுபடிகள் உள்ளன.
நியமனம் வழங்குவது என்றால் அனைத்து தொண்டர் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி கவனவீர்ப்பு பிரேரணையை கொண்டு வந்தார்.
அவரின் பிரேரணை தொடர்பாக ஆராயப்பட்டது. உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
“மாகாணத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்த நியமனத்தை இடைநிறுத்த வேண்டும் என்ற முன்னாள் கல்வி அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவருக்கும் நியமனத்தையும் வழங்குவது தொடர்பாக ஆராயப்படவேண்டும். நியமனம் வழங்களில் தகவல் திரட்டு புத்தகத்தை கருத்தில் எடுக்காது விடுவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. எனவே இந்த நியமனத்தை இடைநிறுத்தி வைப்பதுடன் இது தொடர்பாக முழுமையாக மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே நியமனங்களை வழங்குவது” என வடக்கு மாகாண சபையால் தீர்மானிக்கப்பட்டது.