தொடர் மின்தடைகளின் எதிரொலி- மின்சாரசபைத் தலைவர் பதவி விலகுகிறார்!

இலரங்கை முழுவதும் நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பு சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்ததால், நாட்டின் சகல பகுதிகளும் இருளில் மூழ்கின. இதனையடுத்து இலங்கை மின்சாரசபையின் தலைவர் அநுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

ஆறு மாதகாலத்தினுள் மூன்று தடவைகள் நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு ஏற்பட்டமைக்கு பொறுப்பேற்று தனது பதவியை இராஜினாமாச் செய்யத் தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

பியகம உப மின்நிலையம் மற்றும் லக்‌ஷபான மின்உற்பத்தி நிலையம் என்பவற்றில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே இந்த திடீர் மின்துண்டிப்பு ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு அறிவித்தது. பியகம உப மின்நிலையத்தில் மின்காப்பு இழை (fuse) செயலிழந்ததன் காரணமாக பிற்பகல் 2.15 மணியளவில் முதல்தடவையாக மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தன்னிச்சையாக நாடு முழுவதிலுமுள்ள உபமின்னிலையங்கள் செயலிழந்தன.

முதலில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பை கண்டறிந்து திருத்தப் பணிகள் மேற்கொண்டு தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டபோது பிற்பகல் 4 மணியளவில் மீண்டும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டது. விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. திருத்தப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு முதலில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டன. என்றாலும் மீண்டும் மின்துண்டிப்பு ஏற்பட்டது. ஏனைய இடங்களுக்குப் படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டது.

நேற்றைய மின்துண்டிப்புத் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மின்சார சபையினால் நியமிக்கப்பட்ட உள்ளக மற்றும் வெளியக விசாரணைக் குழுக்களும், பிரதமரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவும் இந்த விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன.

கடந்த மாதம் (25) மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டபோது விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதே குழுக்களே நேற்றைய மின்சாரத் துண்டிப்புத் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துகின்றன. இதேவேளை, கடந்த 25ஆம் திகதியும் நாடளாவிய ரீதியில் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டிருந்தது.லக்ஷ்பான மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து கொழும்புக்கு விநியோகிக்கும் மின்கம்பியில் மின்னல் தாக்கியமையே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அமைச்சு இரண்டு குழுக்களை நியமித்திருந்தது.

இதற்கு மேலதிகமாக இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐவர் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்து மின்துண்டிப்புக்கான காரணங்களை ஆராயுமாறு பணித்திருந்தார்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் மலியத்தகே தலைமையிலான இக்குழுவில் திலக் கொள்ளுரே, பேராசிரியர் சமி கருணாரட்ன, பேராசிரியர் குமார் டேவிட் மற்றும் நியோமல் பெல்போல் ஆகியோர் இக்குழுவில் நியமிக்கப்பட்டனர். நான்கு வாரத்துக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இக்குழுவிடம் ஜனாதிபதி கோரியிருந்தார்.

இந்த நிலையிலேயே நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டிருந்தது. ஆறு மாத காலத்துக்கள் மூன்று தடவைகள் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்புக்களுக்குப் பொறுப்பேற்று இலங்கை மின்சாரசபையின் தலைவர் அநுர விஜயபால பதவியை இராஜினாமாச் செய்யத் தீர்மானித்துள்ளார். மின்சாரத் துண்டிப்பினால் ஏற்பட்ட பாதிப்பு நிலைமை சீரடைந்த பின்னர் தனது பதவியை இராஜினாமாச் செய்யவிருப்பதாக அவர் கூறினார்.

இதற்கமைய மின்சாரசபையின் தலைவர் இன்றையதினம் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை கையளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், மின்சாரசபையினால் நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்களும் இன்று காலை கூடி, மின்சாரத் துண்டிப்பு நாசவேலையா இல்லையா என்பது குறித்து ஆராயவுள்ளது.

Related Posts