தொடர்ந்து 25 வருடங்கள் சிறையில் இருக்கும் பெண் நானாகத்தான் இருப்பேன்!- நளினி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

nalini

இவரது தந்தை சங்கர நாராயணன் (வயது 92), நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகில் உள்ள அம்பலவாணபுரத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று 12 மணி நேரம் பரோலில் செல்வதற்கு நளினிக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி பொலிசார் பலத்த பாதுகாப்புடன் நளினியை இன்று கோட்டூர்புரம் அழைத்து வந்தனர். அவர் தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

கருணை அடிப்படையில் எங்களை தமிழக அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்ந்து 25 வருடங்களாக சிறையில் இருக்கும் பெண் நானாகத் தான் இருப்பேன். தமிழக முதல்வர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது விடுதலையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Related Posts