தொடர்ந்தும் இராணுவம் எங்கள் நிலப் பரப்புக்குள் இருப்பதை அனுமதிக்க முடியாது!

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட வேண்டிய 4419 ஏக்கர் நிலப் பகுதியில் ஓரங்குலத்தைக் கூட விடுவிக்க முடியாது என, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு கண்டனம் வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் குடாநாட்டிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மீள்குடியேற்றத்தைப் பூரணப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாகக் குறித்த நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும், இதற்கெனத் தனக்கு ஆறு மாத காலம் வரை அவகாசம் வழங்குமாறும் கேட்டிருந்தார்.

இதன் பிரகாரம் எமது மக்கள் பொறுமை காத்து வந்த நிலையில், தற்போது இராணுவத் தளபதி புதியதொரு கருத்தை வெளியிட்டுள்ளமை மன வேதனையைத் தருகிறது என, வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் எஸ். சஜீவன் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஜெனிவாவின் 31வது கூட்டத் தொடர் நடைபெறுகின்ற நிலையில் இராணுவத் தளபதி இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி எங்கள் மக்கள் காணிகளை விடுவிப்பதாகத் தெரிவித்து ஆறு மாதங்கள் கடந்திருக்கிறது.

புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்திலும் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்ற ஒரு நிலைமையே தொடர்ந்தும் நீடித்து வருகிறது.

ஆகவே, இனியும் நாங்கள் பொறுமை காப்பதற்குத் தயாரில்லை. எங்களுடைய நிலப் பரப்புக்குள் நாங்கள் அத்துமீறி நுழைவதற்குத் தயாராகவிருக்கின்றோம். தொடர்ந்தும் இராணுவம் எங்களுடைய நிலப் பரப்புக்குள் குடியிருக்க நாங்கள் அனுமதிக்க முடியாது.

இராணுவம் எங்களைச் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை, சொந்த நிலப் பரப்புக்குள் அத்துமீறி நுழைவதற்குத் தயாராகவிருக்கிறோம் எனவும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

Related Posts