தொடரும் பயங்கரம் தமிழகத்தில் ஒரே நாளில் 10 பேர் படுகொலை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் உயர்நீதிமன்ற வளாத்தில் வக்கீல் ஒருவர் வெட்டப்பட்டார். இந்தச் சம்பவங்கள் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. சென்னையில் வக்கீல்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டனர். அதன் உச்சக்கட்டமாக நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் இன்ஜினியர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகும் தொடர்ச்சியாக கொலைகள் நடந்து வருகின்றன.

india

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வக்கீலாக இருப்பவர் மணிமாறன். இவர், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது சேம்பருக்கு வெளியே நின்றபோது குடும்ப பிரச்னையில் அவரது முதல்மனைவியின் மகன் வெட்டினார். அதில் வக்கீல் மணிமாறன் படுகாயம் அடைந்தார். போலீஸ் பாதுகாப்பையும் மீறி உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிண்டி ஈக்காடுதாங்கல் பகுதியில் அடையாறு ஆற்றில் கழுத்து அறுபட்ட நிலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து கிண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம்: வீரவநல்லூர் அருகே திருப்புடைமருதூரை அடுத்த சீதபற்பநல்லூர் தெருவைச் சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன் (47). இவரது தம்பி மாரியப்பன் (44) ஆகியோர் நேற்று பட்டப்பகலில் பஸ்சில் வந்தபோது சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி கண்ணப்பனுக்கும் (30) முன்விரோதம் இருந்துள்ளது. அவர் கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த அண்ணன், தம்பி இருவரும் நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு திரும்பி வரும்போதுதான் எதிர்கோஷ்டி கும்பலால் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மானாமதுரை அருகே கணபதியேந்தலை சேர்ந்த ஜெயா என்பவரின் மகள் காளீஸ்வரி(11). மேலநெட்டூர் அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த இவரை நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும், உறவினரான சுப்பிரமணி மகன் கார்த்திக்(23), டூவீலரில் கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை கழுத்தறுபட்ட நிலையில் காளீஸ்வரி சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கொலை செய்துவிட்டு கார்த்திக் தானும் கழுத்தை அறுத்துகொண்டதாக கூறப்படுகிறது. தேவகோட்டை அருகே கீழவயலை சேர்ந்தவர் கிருஷ்ணன்(52). இவரது அண்ணன் பெத்தபெருமாள் திமுக பிரமுகர். இறந்து விட்டார். கிருஷ்ணன் நேற்று முன்தினம் நள்ளிரவு தேவகோட்டையில் இருந்து டூவீலரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில் தச்சவயல் அருகே தலையில் அடிபட்ட நிலையில் நேற்று காலை இறந்து கிடந்தார். அவரை யாரோ படுகொலை செய்துள்ளனர் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேவதானப்பட்டி அருகே, கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவரது மனைவி பஞ்சவர்ணம். 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை தொடர்பாக, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பஞ்சவர்ணம் அவரது உறவினர்கள் சேர்ந்து ரமேசை கத்தியால் குத்தினர். பதிலுக்கு ரமேஷும் கத்தியால் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த ரமேஷ், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

வாடிப்பட்டி பெட்ரோல் பங்க் எதிரே உள்ள பட்டாசு கடையின் பின் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக வாடிப்பட்டி போலீசாருக்கு நேற்று காலை 11 மணிளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டும், தலையில் கல்லை போட்டும் முகம் சிதைந்த நிலையில் சடலம் இருந்தது. விசாரணையில் அவர் மதுரை கோ.புதூர் மண்மலைமேடு பகுதியை சேர்ந்தவதர்(23) எனத் தெரிந்தது.

மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த ராஜன் மகன் முத்துமாணிக்கம்(23). டிப்ளமோ டிரிபிள் இ படித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நண்பர்கள் சவுந்தரபாண்டி, முனீஸ்வரனுடன் ஒரே டூவீலரில் நேற்று மாலை சக்கிமங்கலத்திலிருந்து வண்டியூர் தீர்த்தக்காடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு டூவீலரில் வந்த மூவர் கும்பல் வழிமறித்து. தாங்கள் மறைத்துவைத்திருந்த அரிவாள்களால் சரமாரியாக வெட்டினர். இதில் முத்து மாணிக்கம் பலியானார். கொலை காதல் தகராறில் நடந்ததாக கூறப்படுகிறது.

வாழப்பாடி அருகே பள்ளத்தாதனூரை சேர்ந்தவர் மனோஜ்குமார் (25). வாழப்பாடி நகர விஜய் ரசிகர் மன்ற தலைவரான இவர், தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பும்போது துக்கியாம்பாளையம் அருகே எதிரே வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முன்விரோதம் காரணமாக அவரை காரை ஏற்றி கொலை செய்துள்ளதாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

நரிக்குடி அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் முத்தையா(42). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். கடந்த 8ம் தேதி முதல் திடீரென மாயமானார். தாமரைக்குளம் அருகே கண்மாய் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முத்தையா பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறு நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts