தொடரும் உண்ணாவிரத போராட்டம்! ஈழத்தமிழர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம்!

திருச்சி விசேட முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் ஈழத் தமிழர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஈழத் தமிழர்கள் 4 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில், மேலும் 2 ஈழத் தமிழர்ள் தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவிற்கு சுற்றுலா வீசாவில் சென்ற போது கைதுசெய்யப்பட்ட ஈழத் தமிழர்களும் அகதி முகாமிலுள்ள ஈழத் தமிழர்களும் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று நான்காவது நாளாக திருச்சி விசேட முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களில் நடனசபாபதி பிரபாகரன் மற்றும் நாகராஜன் குணசீலன் ஆகிய இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது, தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை வைத்தியசாலைக்கு செல்ல மாட்டோம் என பாதிக்கப்பட்டவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஈழத் தமிழர்கள் 4 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில், நமசிவாயம் தயாநந்தன், கறுப்பண்ணத்தேவர் அருளின்பத்தேவர் ஆகிய இருவரும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவிற்கு ஆலய தரிசனத்திற்காக சென்றிருந்த போது, விடுதியொன்றில் தங்கியிருந்த தம்மை கியூ பிரிவு பொலிஸார் கைதுசெய்ததாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

விசாரணையொன்று உள்ளதாக தெரிவித்து கியூ பிரிவு பொலிஸார் தம்மை அழைத்துச் சென்றதாகவும், தம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை அவர்கள் பதிவுசெய்துள்ளதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களில் மூவர் நீண்ட நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றவர்கள் எனவும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கும் ஈழத் தமிழர்கள், தாம் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் கூறியுள்ளனர்.

தம்மை விடுதலை செய்து தாயகத்துக்கு மீள அனுப்புமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நடனசபாபதி பிரபாகரன், சுதாகரன் சுதர்சன், பேரின்பநாயகம் கோபிநாத், கிருஷ்ணபிள்ளை தயாகரன், உமாகாந்தன் குருவிந்தன், ஜெகதீபன் தர்ஷன், கந்தசாமி சத்தியசீலன், சகாயநாதன் ரொபின்பிரசாத், சிவசுப்ரமணியம் காந்தரூபன், நாகராஜன் குணசீலன், ரகுநாதன் யோககுமார் மற்றும் அருளின்பத்தேவர் ஆகியோரே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts