இன்று காலை 11.30 மணி முதல் 1 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் எம்பிக்கள் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற கூட்ட முடிவுகளின் அடிப்படையில் கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகளும் நடைபெற இடை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற அனைவரும் சிங்கள பெளத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலைமையை மாற்றி, மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடனேயே இனி புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மனோ சமர்பிப்பார் எனவும்.
கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதை தடை செய்ய தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்த திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்கள பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடன் தடை செய்ய வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது .
முல்லை நீராவியடி கோவில் மற்றும் விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அப்படி அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரை தேரர் சொல்வது உண்மைக்கு புறம்பானது என தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.
கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பாரமரிக்க, தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால், அவற்றை அந்த பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகிறார். இந்நிலையில் கிணறுகளை பாரமரிப்பது யாரென தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தை கூட்டுவார் எனவும்
மலைநாட்டில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விஹாராதிபதி ஏற்றியது பிழையானது. பெளத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பது பிழை. இந்த பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் முடிவு செய்யப்பட்டது .
கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் மனோ கணேசன், திகாம்பரம். எம்பீக்கள் திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோரும், தொல்பொருளாராட்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மாண்டாவேல, இந்து சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரன், அமைச்சர் மனோ கணேசனின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அனைத்து தமிழ் எம்பீகளுக்கும் அவசர கூட்டம் தொடர்பில் தகவல் அனுப்பியும் ஏனைய எம்பீக்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை. அரவிந்தகுமார், ராதாகிருஷ்ணன், ஆறுமுகன் தொண்டமான் ஆகிய எம்பீக்கள் வெளிநாடு சென்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.