தைவானில் விமான விபத்து: 40க்கும் மேற்பட்டோர் பலி

நெருக்கடியான சூழலில் தைவானில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

taiwan_accidente_avion

தைவானின் ட்ரான்ஸ் ஏசியா விமானம் பெங்கு தீவில் இருக்கும் மகோங் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டது.

இந்த விமானத்தில் ஐம்பத்தி நான்கு பயணிகளும் நான்கு சிப்பந்திகளும் இருந்ததாக, தைவானின் சிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜிஈ222 என்ற இந்த விமானம் தரையிறங்க முயன்று, பிறகு விபத்திற்குள்ளானதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 11 பேர் காயமடைந்திருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் யே குவாங் ஷி தெரிவித்திருப்பதாக சிஎன்ஏ கூறியிருக்கிறது.

சம்பவம் நடந்த இடம் களேபரமாகக் காட்சியளிப்பதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையின் இயக்குனர் ஷான் ஷேன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஏடிஆர் 72 ரக விமானம் கவோஷியோங் நகரிலிருந்து உள்ளூர் நேரப்படி மாலை 5.43 மணிக்கு புறப்பட்டது. ஆனால், 7.06 நிமிடங்களுக்கு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்ததாக சிஎன்ஏ கூறியுள்ளது.

அதற்குப் பிறகு, பெங்கு தீவின் ஜிஜி கிராமத்தில் தீப்பிடித்து நொறுங்கிக் கிடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமையன்று மாட்மோ என்ற சூறாவளியின் காரணமாக உருவான கடும் மழையும் காற்றும் தைவானை உலுக்கியெடுத்தன.

இந்த மாட்மோ சூறாவளியின் காரணமாக பல விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை ஐந்து முப்பது மணியளவில் இந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த நேரத்தில்தான் இந்த விமானம் கவோஷியோங்கிலிருந்து புறப்பட்டது.

Related Posts