தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட தேவியன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் என்பவரின் தாயாரான சுந்தரலிங்கம் ரஞ்சித மலர் (வயது 57), பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர், கனடாவை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டு செல்வதற்கு முயன்றபோதே அரச புலனாய்வு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று செய்தி தெரிவிக்கின்றது.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலை 1மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்த அவர், அதிகாலை 4.45க்கு பயணிக்கவிருந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 683 விமானத்தின் மூலம் டோஹா ஊடாக கனடாவுக்கு செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் வைத்திருந்த கடவுச்சீட்டில் ஆறுவருடங்களுக்கான கனடா விஸா குத்தப்பட்டுள்ளது.
எனினும், வைத்திருந்த ஆவணங்களில் போலியான ஆவணங்கள் இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள், அரச புலனாய்வு பிரிவினரின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே அவரது பயணம் தடுக்கப்பட்டுள்ளது என்றும் அச்செய்தி தெரிவித்துள்ளது.
புலிகள் அமைப்பின் புதிய தலைவர் என்று சொல்லப்பட்ட கோபி உள்ளிட்ட மூவருக்கும் இராணுவத்துக்கும் இடையில் அநுராதபுரம் பதவிய காட்டுப்பகுதியில் இடம்பெற்ற மோதலில் மூவரும் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதனையடுத்து தேவியனின் தாயாரான் ரஞ்சித மலர், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை, கோபி என்றழைக்கப்படும் செல்வநாயகம் கஜீபனின் மனைவியான கஜீபன் சர்மிளா, ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயன்றபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.