தேர்தல் பிரசாரம் : இ.போ.சபைக்கு ரூ.1,425 இலட்சம் கொடுக்க வேண்டும்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்கஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டன.

இதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு, இன்னும் 1,425 இலட்சம் ரூபாய் வழங்கவேண்டியுள்ளது என உள்ளக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை காரணமாக 1,925 இலட்சம் ரூபாய் செலவு ஏற்பட்டது.

அதில் 500 இலட்சம் ரூபாய் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்டதுடன் எஞ்சிய 1,425 இலட்சம் ரூபாய் இன்னும் வழங்கப்படவில்லை.

வழங்கப்பட்ட 500 இலட்சம் ரூபாவில் 250 இலட்சம் ரூபாய் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளர் பதவி வகித்த ஒருவரால் வழங்கப்பட்டதாகவும் மிகுதி 250 இலட்சம் ரூபாய், காமினி செனரத், அலரி மாளிகை எனும் பெயரில் வழங்கப்பட்டுள்ளதாகவும் உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்க வேண்டிய 1,425 இலட்சம் ரூபாயை வழங்குமாறு, தலா 250 இலட்சம் வழங்கிய இருவருக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளருக்கும் கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்காக பதில் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தின் ஊடாகவே அல்லது அரசாங்கத்தின் ஊடாகவோ குறித்த பணத்தை இலங்கை போக்குவரத்து சபைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts