தேர்தல் சட்டம் மற்றும் தனது ஆலோசனைக்கு அமைய செயற்படாவிடின் அரச ஊடகங்களின் கழுத்துக்கு அருகில் வாள் வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தனியார் ஊடகங்களும் அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு தேர்தல் முடிவு வழங்கப்பட மாட்டாதென அவர் எச்சரித்துள்ளார்.
எனினும் வெவ்வேறு இணையத்தளங்களில் பரவும் கருத்துக்களை நிறுத்த தன்னால் முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு உபதேசம் செய்ய முடியாது என்றும் எனினும் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக் கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளம் நாயகம் கூறியுள்ளார்.
தேர்தல் காலத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் சம்பவங்களை உடனடியாக தேர்தல்கள் செயலகத்திற்கு பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவங்கள் எதுவும் இடம்பெறுமாயின் EC (இடைவெளி) EV (இடைவெளி) மாவட்டம் (இடைவெளி) உங்கள் முறைப்பாடு என்பவற்றை பதிவு செய்து 2343 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்யப்படும் முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை பதிவு செய்யும் பிரிவினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் தேர்தல் நாளன்று வாக்களிக்கவென தனியார் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் 40 கிலோ மீற்றருக்கு குறைவான தூரத்தில் இருந்தால் அவருக்கு அரைநாள் விடுமுறையும் 40-80 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தால் ஒருநாள் விடுமுறையும் 80-150 கிலோ மீற்றர் தூரம் எனில் 1 1/2 நாள் விடுமுறையும் அதற்கு அதிகம் தூரத்தில் இருப்பவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்காதவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினத்தின் பின் தேர்தல் சட்டங்களை மீறி கைது செய்யப்படும் எந்தவொரு சந்தேகநபருக்கும் பொலிஸ் நிலையத்தில் பிணை வழங்கப்பட மாட்டாதெனவும் வாக்களிப்பு மத்திய நிலையத்தில் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டால் வாக்களிப்பு இடைநிறுத்தப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.