தேர்தலை பகிஸ்கரிப்பதா? அல்லது சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவா? ஆனந்தசங்கரி கேள்வி

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகள் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்திற்காகப் பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை.

தென் இலங்கை அரசியற் தலைவர்கள் அமைச்சர்கள் பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சமஸ்டி கிடையாது – ஒற்றையாட்சி அரசியலின் கீழ்தான் தீர்வு என்று திரும்பத்திரும்ப கூறியும் இவர்கள் அதனை ஏன் உள்ளடக்கி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்? இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று தான் வேட்பாளர்களும் அவர்களைச் சார்ந்த கட்சி பிரமுகர்களும் கூறுகின்றார்கள் அதன்பின் ஐந்து கட்சிக் கூட்டமைப்புக்கு இரண்டே இரண்டு தெரிவுதான் உண்டு.

  1.  தேர்தலை பகிஸ்கரிக்கச் சொல்ல வேண்டும். இல்லையெனில்
  2.  தம்பி சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும். இரண்டில் ஒன்றை இவர்கள் சொல்வார்களா?

இவர்கள் தற்போது வைத்திருக்கும் கோரிக்கைகளில் சர்ச்சைக்குரிய விடயங்களை விட்டுவிட்டுப் பார்த்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி காலத்திற்குக்காலம் ஜனாதிபதி, பிரதமர்கள் ஆகியோரிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தான்.

2005ஆம் ஆண்டு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைத்து, கௌரவ ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு சமஸ்டிக்கு ஆதரவாக சிங்கள மக்களும் 49வீதம் வாக்களித்தனர். ஆனால் அந்த நிலை இன்றில்லை. அன்று தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று பகிஸ்கரிக்கச் சொன்ன த.தே.கூட்டமைப்பு – இப்போது எந்த முகத்துடன் சமஸ்டி பற்றி பேச முடியும். இது அவர்கள் விட்ட மிகப் பெரிய வரலாற்றுத் தவறு!
காலத்துக்குகாலம் த.தே. கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததால் மக்கள் வெறுப்படைந்திருந்த நேரத்தில் திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை அழைத்துவந்து தமிழ்க் கூட்டமைப்பின் சரிவிலிருந்து 2013ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு காப்பாற்றினார்கள்.

இப்போதும் சரிவடைந்துள்ள தமது கூட்டமைப்பை நிமிர்த்த மீண்டும் என்ற ஏதோ ஒரு உள்நோக்கில் அதே தவறைத்தான் செய்கிறார்கள்! போக முடியாத ஊருக்கு வழிகாட்டினால் எப்படியும் முயற்சியாவது செய்யலாம். இவர்கள் இல்லாத ஊருக்கு வழிகாட்டப் போகிறார்களாம்! இதற்கு முன்னாள் முதலமைச்சரும் கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளை அறிந்திருந்தும் உடந்தையாகிறார். எந்த சட்டத்தின்கீழ் தமது பதவிகளைத் தக்கவைக்க சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளுகிறார்களோ அதனை மீறி மக்களை ஏமாற்ற இவர்கள் ஆடும் நாடகத்தை மக்கள் இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களும் இதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Related Posts