எதிர்வரும் சில மாதங்களுக்கு வைரஸ் அச்சுறுத்தல் நிலை தொடரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், “தற்போதைய சூழ்நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவதில் மிக முக்கியமாக அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நாடொன்றில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு உரிய வேளையில் தேர்தலை நடாத்துவது மிகவும் அவசியமாகும். ஆனால் மிகவும் நெருக்கடிமிக்க சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் இது விதிவிலக்காக அமையலாம்.
முழு உலகையும் போன்று இலங்கையும் அத்தகையதொரு நெருக்கடி மிக்க, தவிர்க்க முடியாத சூழ்நிலையையே எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. உலகலாவிய வைரஸ் தொற்றுநோய் மக்கள் சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் மாத்திரமன்றி, உலகப் பொருளாதாரத்திலும் பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது.
மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் சாத்தியப்பாடு இருப்பதாகவும், அவற்றைத் தவிர்க்குமாறும் சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர வேண்டிய தேவையுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டுமக்களில் சுகாதார நலனும், பாதுகாப்புமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
எதிர்வரும் சில மாதங்களுக்கு வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலை தொடரலாம் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இத்தகைய பாரிய தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்தலை நடாத்துவது ஒரு செயற்திறனான ஜனநாயக நடவடிக்கையாக அமையாது.
இப்போது தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும். தேசிய மற்றும் சர்வதேச சுகாதார நிபுணர்கள் நிலைமை சுமூகமானதும், பாதுகாப்பானதுமான நிலையை அடைந்திருக்கிறது என்பதை உறுதிசெய்யும் வரை தேர்தலை நடாத்துவது ஆபத்தானதும், பொறுப்பற்றதுமான செயலாகும். எனவே அத்தகைய உறுதிப்பாட்டின் பின்னரே தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் எனவும் பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரம் இல்லை என்றும் 1981 ஆம் ஆண்டின் இலக்கம் 1 நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3) ஐ மேற்கோள் காட்டி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிக்கையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.